கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண அதிக மக்கள் கூடுவார்கள். இந்த போட்டி உலக அளவில் புகழ் பெற்ற போட்டியாக இருக்கிறது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

ஜானிக் சின்னர் போஸ்டர்

ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து நிதானமாக சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் சின்னர். இதன் மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் போஸ்டரை போன்று "விம்பிள்டன் நாயகன் என்ற தலைப்பில் ஜானிக் சின்னர் காேப்பையுடன் மக்களிடம் செல்பி எடுப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டது.

ரூ.34 கோடி பரிசு

இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் நான்கு நிமிடம் நீடித்தது. சின்னர் வெற்றி பெற்றதும் தனது பயிற்சியாளர் குழு உறவினர்களுடன் வெற்றியை கொண்டாடினார். சாம்பியன் பட்டம் பெற்ற சின்னருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. ரன்னர் அப் பட்டத்தை வென்ற அல்காரசுக்கு 17 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்தது. சின்னர் ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும்,அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்ற நிலையில் தற்போது விம்பிள்டன் பட்டத்தை வென்று நான்காவது கிராஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

டிரெண்டிங்கில் ஜனநாயகன்

விஜய் மக்களுடன் செல்பி எடுப்பது போன்ற ஜனநாயகன் போஸ்டர் உலகளவில் ரீச் ஆகியிருப்பதை நினைத்து விஜய் ரசிகர்கள் படு குஷியாகியுள்ளனர். தற்போது அரசியலில் களம் கண்டிருக்கும் விஜய்க்கு இது பெரும் ஆதரவாக மாறியிருக்கிறது. தற்போது ஜானிக் சின்னரின் போஸ்டர் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. பலரும் விஜய் தான் சினிமாவுக்கு நம்பர் 1 என்றும் கூறி வருகின்றனர். இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இது அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.