கவிஞர் கண்ணதாசனை நினைத்து 19 வயதில் தான் அழுத சம்பவம் பற்றி நடிகரும், எம்.பி.,யுமான கமல்ஹாசன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த சம்பவம் பற்றிக் காணலாம்.

1975 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “அபூர்வ ராகங்கள்”. இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் படமாகும். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.

இந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய கமல்ஹாசன், ‘நம்முடைய மிகப்பெரிய கவிஞரான கண்ணதாசன் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். எனக்கு அப்போது 19 வயது இருக்கும். நான் படப்பிடிப்பில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டி செய்வேன். லைட் பிடிப்பதில் தொடங்கி அவர்களே என்னை வேலை செய்தது போதும் நீ கிளம்பு என்னும் சொல்லும் வரை இருப்பேன். ஒரு இடத்தில் கீழே அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

மாடியில் இருந்த கண்ணதாசன் பாடல் எழுதிக் கொடுக்கவில்லை என்ற டென்ஷனில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி கொண்டிருக்கிறார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அங்கே வந்தாரு. உடனே பாலசந்தர் அவன் (கண்ணதாசன்) ரெடியா.. நாம போலாமா என கேட்க, எஸ்.எஸ்.வி கையை பிசைந்து கொண்டு தயங்கி நின்றார். என்ன ஆச்சு கே.பாலசந்தர் கேட்க, நாளைக்கு வச்சுக்கலாமா என அவர் பதிலளிக்கிறார்.

என்ன விளையாடுறீங்க.. ஷூட்டிங் இருக்கு என பாலசந்தர் டென்ஷனாக, அவரை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் சிறிது தூரம் சென்று நடந்ததை சொன்னார். இதனைக் கேட்டு தலையில் அடித்து கொண்ட வந்த பாலசந்தர், என்ன பண்ண சொல்றீங்க, பெரிய கவிஞன் என்பதற்காக எத்தனை நாட்கள் தான் காத்திருப்பது? என கத்தியதுடன், எங்க இருக்காரு அவரு?, என்னிடம் வந்து பேச சொல்லுங்க.. அது ஏன் உங்களை அனுப்புறாரு?, நான் ஷூட்டிங்கை விட்டு விட்டு எத்தனை நாட்கள் தான் காத்திருப்பது என ரொம்ப கோபப்பட்டார்.

நானும் அனந்துவும் மேலே சென்று பார்த்தால் அங்கு கண்ணதாசன் தூங்கி கொண்டிருந்தார். வந்து விஷயத்தை சொல்ல, ரொம்ப சந்தோஷம், நானும் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு தூங்க போகட்டுமா என கடுமையாக விமர்சித்தார். கண்ணதாசன் அரை தூக்கம் தான் தூங்குவார் என்பதால் பாலசந்தர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து எங்களிடம் பாலசந்தர், அவர் எழுந்து விட்டாரா என பாருங்க.. எதையாவது எழுதி கொடுங்க சொல்லுங்க.. நானா இதெல்லாம் எழுத முடியும்.. வந்தா எழுத மாட்டேனா.. என கூற, நாங்கள் மேலே போய் பார்த்தால் கண்ணதாசனை காணவில்லை. ஆனால் அவரின் உதவியாளர் எழுதி வச்சிட்டு போயிட்டாருங்க. மேலே இருக்கு உங்களைப் போய் பார்க்க சொன்னாருங்க என கூறினார்.

கண்ணதாசன் எப்போ வந்தாரு, எப்போ போனாருன்னு யாருக்கும் தெரியாது. எம்.எஸ்.விஸ்வநாதனும் சென்று விட்டார். சரி என பாலசந்தர் சொன்னதைக் கேட்டு மேலே போய் பார்த்தால் அதைப் பார்த்ததும் எனக்கு கண் கலங்கி விட்டது. அடேங்கப்பா ஒவ்வொன்னும் கவிதையா இருந்துச்சு. கிட்டதட்ட 7 செட் வரிகள் எழுதியிருந்தார். எங்களுக்கு எதை சேர்க்கணும், நீக்கணும்ன்னு தெரியல. அதில் ஒன்றுதான் ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல். அந்த பாடல் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு தேசிய விருதும் பெற்றுக் கொடுத்தது.