பஹல்காம் தாக்குதலால் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மனித வெடிகுண்டாக மாறி, பாகிஸ்தானுக்கு செல்ல தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"மனித வெடிகுண்டாக மாறுவேன்"

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு பாகிஸ்தானும் கடுமையாக எதிர்வினையாற்றியது.

இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மனித வெடிகுண்டாக மாறி, பாகிஸ்தானுக்கு சென்று சண்டை செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கண் சிவந்த கர்நாடக அமைச்சர்:

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இந்துஸ்தானிகள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராக நாம் போருக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் சண்டை செய்ய தயாராக இருக்கிறேன்.

ஒரு அமைச்சராக, அவர்கள் என்னை அனுப்பினால், நான் போர் களத்திற்கு செல்வேன். தேவைப்பட்டால், நான் மனித வெடிகுண்டாக மாறுவேன். நான் நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு பேசவோ இல்லை. நாட்டிற்கு தேவைப்பட்டால், (பிரதமர் நரேந்திர) மோடி மற்றும் (மத்திய உள்துறை அமைச்சர்) அமித் ஷா எனக்கு ஒரு தற்கொலை குண்டைக் கொடுக்கட்டும். நான் அதை அணிந்து பாகிஸ்தானுக்குச் செல்வேன்" என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்:

சமீபத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க தேவையில்லை என கூறி விமர்சனத்திற்கு உள்ளானார். "பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். நாங்கள் போர் தொடுப்பதை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும். மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் மத்திய அரசு பயனுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

சித்தராமையாவின் இந்த கருத்து, பாகிஸ்தான் வரை கவனம் ஈர்த்தது. சித்தராமையாவின் கருத்தை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த சித்தராமையா, "தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே போர் வர வேண்டும். போரிலிருந்து தீர்வு கிடைக்காது. போருக்கான கோரிக்கைகளை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை" என்றார்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருகின்றனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததற்கு எதிராக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, "தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும். மோடியின் போர் வெறியையோ அல்லது சிந்து நதி நீரை பாகிஸ்தானிடமிருந்து பறிப்பதற்கான எந்தவொரு முயற்சியையோ பாகிஸ்தான் மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார். பிலாவல் பூட்டோவின் இந்த கருத்து, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.