கட்டாய சேவைக் கட்டணத்தை வசூல் செய்த உணவகங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், சேவைக் கட்டணத்தை வசூலித்த உணவகங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேவைக் கட்டணம் வசூல் செய்யப்பட்டதா?

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், கட்டாய சேவைக் கட்டணங்களைத் திருப்பித் தரத் தவறிய ஐந்து உணவகங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ், சேவை கட்டணத் தொகையைத் திருப்பித் தருமாறு உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு உணவகமும் நுகர்வோரை சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது அல்லது சேவைக் கட்டணத்தை வேறு எந்தப் பெயரிலும் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் தொடர்பான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதி பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

மத்திய அரசு நடவடிக்கை:

எந்தவொரு ஹோட்டல் அல்லது உணவகமும் ஒரு நுகர்வோரை சேவைக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், சேவை கட்டணம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை நுகர்வோருக்குத் தெளிவாக தெரிவிக்க வேண்டும் உள்ளிட்டவை அதில் இடம் பெற்றுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றம் சேவைக் கட்டணங்கள் குறித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் பெறப்பட்ட புகார்கள் மூலம், சில உணவகங்கள் நுகர்வோரிடமிருந்து முன் அனுமதி பெறாமல் கட்டாய சேவைக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிப்பதாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் அவை ஈடுபடுகின்றன என்று புகார்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆணையம் இந்த உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.