கடலூர்: கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள கிரிம்சன் ஆர்கானிக் ராசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனம் செல்லும் வழியில் இருந்து கேஸ்கட் வெடித்து திடீரென ரசாயன புகை மண்டலம் முழுவதும் பரவியது. பொதுமக்கள் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடலூர் சிப்காட்டில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர் - சிதம்பரம் சாலையில் இருக்கும் சிப்காட் தொழில் மையத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும், காலம் கடந்துபோன போன இயந்திரங்களாலும் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. அப்போதெல்லாம் அப்பாவி மக்களும், ஊழியர்களும் உயிரிழக்கவும் செய்கின்றனர். அதன்படி இங்கு செயல்பட்டு வரும் `கிரிம்சன் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தொழிற்சாலைக்குள் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், ரசாயனப் புகை வெளியேறியது.

கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல்

கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலையில் ரசாயனம் செல்லும் குழாயில் இருந்த கேஸ்கட் வெடித்ததால், அதிக அளவில் ரசாயனப் புகை மண்டலம் முழுவதும் பரவியது. இந்தப் புகையில் துர்நாற்றம் வீசியதாகவும், இதனால் குடிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60-க்கும் மேற்பட்டோருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு, ஆலைக்குள் புகுந்து அங்குள்ள பொருள்களை அடித்து உடைத்துள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரிம்சன் ஆர்கானிக் என்ற இரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் பல தொழிலாளர்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.