தஞ்சாவூர்: கந்துவட்டிக் கொடுமையால் வாலிபரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்ய தூண்டியவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாணாதுறை பத்துகட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (54). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை கடைக்காகவும், ஏற்கெனவே வாங்கிய கடனை கொடுக்கவும், சிவசுப்பிரமணியன் அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டி கொடுத்துள்ளார்.

ஆனால், சில மாதங்களாக சிவசுப்பிரமணியனால், கடன் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் சிவசுப்பிரமணியனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அவர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, மே1-ம் தேதி, சிவசுப்பிரமணியனின் மகன் அருண்(22), கடையில் இருந்த போது, பணம் கேட்டு, செந்தில்குமார் தகராறு செய்துள்ளார். பிறகு பாலகுரு என்பவரிடம், செந்தில்குமார் பணம் கொடுப்பது குறித்து பிரச்சனையை கூறியுள்ளார்.

இதில், பாலகுரு துண்டுதலின் பேரில், செந்தில்குமார், தனது நணபர்களான வெங்கடேசன், சந்திரசேகரன், கதிரவன், ஜீவாகருணா(எ) முகமது சபீர் ஆகியோருடன், சிவசுப்பிரமணியன் கடைக்கு சென்று, அங்கிருந்த அருணிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலகுரு, செந்தில், வெங்கட், சந்திரசேகரன்,கதிரவன் ஆகியோரை கைது செய்தனர். இதில் ஜீவாகருணா தலைமறைவாகிவிட்டார்.

இவ்வழக்கு, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பாலகுருவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் செந்தில், வெங்கட், சந்திரசேகரன், கதிரவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

வீட்டு பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

தஞ்சாவூரில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் பாப்பா நகரில் கடந்த டிச. 19-ம் தேதி பிரியங்கா என்பவர் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் 21-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் தங்க நகைகள், 765 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார், இந்த புகாரின் அடிப்படையில் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அங்கு தடய அறிவியல் சோதனை நடத்தினர். இதில் கைவிரல் ரேகை எடுத்து சோதனை செய்ததில், சரித்திர குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் பாளையூர் வேப்பந்தட்டையைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்பவரின் கைரேகை ஒத்து போனது.

இதையடுத்து அவரை பெரம்பலூருக்கு சென்று நவீன்குமாரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.