கடன் கேட்டு கொடுக்க மறுத்ததால், இளம்பெண் செய்த செயல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( வயத 87 ) கடந்த 11ம் தேதி மதியம் , இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரின் விசாரணையில் மூதாட்டிக்கு பழக்கமான அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரியா ( வயது 20 ) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் சம்பவத்தன்று மூதாட்டியிடம் சுப்ரியா கடன் கேட்டுள்ளார். மூதாட்டி மறுக்கவே , வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுப்ரியா தள்ளிவிடவே, கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பீரோவில் இருந்த 1.80 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளை சுப்ரியா திருடிச் சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளியே வந்து 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஜான்சன் ( வயது 37 ) என்பவர் 2014 - ம் ஆண்டு, தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மீஞ்சூர் போலீசார் அத்திப்பட்டைச் சேர்ந்த சீனிவாசன் ( வயது 35 ) உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2015 - ல் ஜாமினில் வெளிவந்த சீனிவாசன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். குடும்பத்தினருடன் தலைமறைவானதால், 10 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி மீஞ்சூர் காவல் ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்திப்பட்டு பகுதியில் சீனிவாசன் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு நடந்து சென்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மீது போலீஸ் வாகனம் மோதி பலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு ( வயது 84 ) ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர். இவர் காலையில் நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதே தெருவில் வசிக்கும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசனை அழைத்து செல்வதற்காக தலைமை காவலர் அமரன் ( வயது 50 ) போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். வாகனத்தை திருப்புவதற்காக பின்னால் எடுத்த போது ஸ்ரீராமுலு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி திடீரென உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவன மேட்டூர், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் மகள் மதுமிதா ( வயது16 ) தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி. கடந்த 11ம் தேதி , சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளது எனக் கூறி மருத்துவம் பார்த்துள்ளனர். மறுநாள் காய்ச்சல் இல்லாததால் , சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிறுமிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , நாடி துடிப்பு குறைந்து வருவதாக கூறி , திருப்பி அனுப்பிய நிலையில் வீட்டுக்கு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார்.