இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் வரவிருக்கும் ஓணம் பண்டிகை ஒட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ஓணம் கொண்டாட்டங்கள், வரும் ஆக., 16ம் தேதி தொடங்கி, திருவோணம் எனும் மங்களகரமான நாளில், ஆக., 26ம் தேதி முடிகிறது. இந்த பண்டிகை மற்றும் சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள், மாதம் முழுதும் தொடர்ந்து நடக்கும்.

பயணியர் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் வேண்டும் என, அம்மாநில பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள், பயணியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவில் உள்ள நகரங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை, அந்தந்த ரயில்வே மண்டலங்கள் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.