திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது என்பதால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசு இதுகுறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலுவான கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருவிசநல்லூரில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 23-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஒரே ஆசிரியரிடம் ஐந்து வகுப்புகள்

இந்த தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார். அனைத்து வகுப்புகளின் மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கற்பிக்க வேண்டிய நிலை இருப்பதால், ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியாக போதுமான கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெற முடியாமல் இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வேறு பள்ளிக்கு அனுப்புவதிலும் சிக்கல்

திருவிசநல்லூர் பகுதியில் இருந்து அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் சிறிய குழந்தைகளை தினமும் அங்கு அனுப்புவது பெற்றோருக்கு பெரும் சிரமமாக உள்ளது. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர் சேர்க்கை குறைந்ததாக பெற்றோர் வேதனை

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், "ஒரு காலத்தில் இந்தப் பள்ளியில் 40 முதல் 50 மாணவர்கள் வரை கல்வி பயின்றனர். போதுமான ஆசிரியர்கள் இருந்ததால் மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற்றனர். தற்போது ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர். இதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கையும் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இருந்து கல்வி கற்பித்தால்தான் அவர்களின் எதிர்காலம் செழுமையாக என்றனர்.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமித்து, ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தப் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிப்பது அவசியம். மாணவர்களுக்கு அழியாத செல்வம் போன்றது கல்வி. அவர்களின் எதிர்காலத்தை வலுவானதாக மாற்றுவதும் கல்விதான். ஆனால் இங்குள்ள சூழல் அஸ்திவாரம் இல்லாத மணல் வீடு போன்று உள்ளது. எனவே இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.