“என்னை அழைத்தது பாஜகதான், அதிமுகவை நடத்துவது பழனிசாமியின் குடும்பத்தினர்தான்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பாக பேட்டியளித்ததுள்ளார்.

“நாம் முன்மொழியவில்லை என்றால் கே.பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது” என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், பல்வேறு விஷயங்களை அவர் கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேட்டி:

அதிமுக வெற்றிபெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி ஏன், கோடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமர்த்தவில்லை. அவரை 2009ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதலமைச்சராக ஆகி இருக்க முடியாது.

இபிஎஸ் மகன், மைத்துனர், மாப்பிள்ளை தான் தற்போது அதிமுகவை நடத்தி வருகின்றனர்.