பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தவறினால் எதிர்கால தலைமுறை மன்னிக்காது என தமிழக அரசுக்கு பாஜக தலைவர் வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுருங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மிக முக்கியமான நன்னீர் சதுப்புநிலப் பகுதியான பள்ளிக்கரணை 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இது மழைநீர் வடிகாலாக மட்டுமின்றி சென்னையின் தெற்குப் பகுதிகளில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முக்கிய இயற்கை அரணாகவும் திகழ்கிறது. இந்த சதுப்பு நிலத்தில் அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்கிறது. 2007ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சதுப்பு நிலப் பகுதி கழிவுகள் கொட்டுதல், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 3 கி.மீ நீளத்திற்குத் தடுப்புச்சுவர் மற்றும் 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டு சதுப்பு நில எல்லையை பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வானதி சீனிவாசன் கடும் எச்சரிக்கை

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்க பகுதியை குறைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி, பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கரில் பரந்து விரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இப்போது வெறும் 1,725 ஏக்கராக சுருங்கியுள்து.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னை மாநகரின் இயற்கை பாதுகாப்பு அரண். பெருமழை, வெள்ளத்தின்போது தண்ணீரை உள்வாங்கி, கடலில் சேர்க்கும் இயற்கையான வடிகால் அமைப்பு. அதுமட்டுமல்ல, மழைக்காலத்தில் இந்த சதுப்பு நிலம் உறிஞ்சும் நீரானது, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு பயன் தருகிறது. 100க்கும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவையினங்களின் வாழ்விடமாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது.

இத்தகைய இயற்கை பாதுகாப்பு அமைப்பை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சதுப்பு நிலங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் ஆணையத்தின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசின் இந்த முடிவு, அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே, தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற்று, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், எல்லையை வரையறுத்தி அதை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

கொஞ்சம் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தவறினால், எதிர்கால தலைமுறை நம்மை மன்னிக்காது. சென்னை மாநகரம் மழை காலங்களில் பேரழிவை சந்திக்கும் சூழல் உருவாகும். இதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.