தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜின் வருகைக்கு பின்பு வானத்தில் இருந்து பெய்வதாக நம்பிக்கொண்டிருந்த மழையை பாடல் கேட்பவர்களின் நெஞ்சுக்குள் மாமழையாய் பெய்திடச் செய்தார். மின்சார கம்பிகளில் அட்டக்கத்தியாக சுத்திக்கொண்டிருந்த இளைஞர்களின் கனவுக்கு இசையூட்டியவர். ஹாரிஸ் பாடல்கள் என்றாலே தனித்துவம் தான். தற்போது தான் இசையமைக்கும் படங்கள் குறைவு என்றாலும், இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

மின்சார பாய்ச்சல்

உலகையே கலக்கிடும் மின்சார பாடலா என்ற அவரது முதல் படமான மின்னலே திரைப்படத்தில் எதை நினைத்து கவிஞர் வாலி எழுதினாரோ தெரியவில்லை, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான பல பாடல்களிலும் அந்த மின்சார பாய்ச்சல் இருக்கிறது. இரவில் அறவே வராத தூக்கத்தில் மாய இசையால் மனதை வருடி சென்றவர். ஹாரிஸ் ஜெயராஜை பலரும் செல்லமாக மாம்ஸ் என்றே அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அவரது இசையின் பாடல்களை மக்கள் ரசித்து கொண்டிருக்கின்றனர்.

பிடித்த படங்களை செய்கிறேன்

சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் அளித்த பேட்டியில் துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் நடிக்க கூடிய பத்து படங்களை தவிர்த்தேன். என்னால், ஆயிரம் கமிட்மெண்டோடு பல படங்களுக்கு இசையமைக்கும் ஜாம்பவான் கிடையாது. ஒரு படத்தில் இசையமைத்தாலும் துல்லியமாக பிடித்து செய்ய வேண்டும். எல்லோரும் என்னிடம் இப்போது படம் செய்வது இல்லை ஏன்? தொடர் தோல்வி படங்களாக இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, பிடித்த படங்களை பிடித்த நேரத்தில் செய்துகொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

இசை நிகழ்ச்சியில் கலக்கும் ஹாரிஸ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் தற்போது உலகெங்கும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அண்மையில் கோவையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் அவரது பாடல்களை கேட்டும் மதி மயங்கி போனார்கள். அந்த அளவிற்கு வைப்போடும் இசை நிகழ்ச்சியை ஹாரிஸ் நடத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டையும் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும் கான்சர்ட் நடத்தி வருகிறார்.

கனடா நாட்டு அரசு கெளரவம்

பல நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜிற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு விலைமதிப்பில்தாதது. அதே நேரத்தில ஒரு நாட்டின் அரசு அவரை கெளரவித்திருக்கிறது. அண்மையில் கனடா நாட்டின் டொரண்டோவில் தனது இசைக்குழுவுடன் கான்சர்ட் செய்திருந்தார். இதற்காக அந்நாட்டு அரசு ஹாரிஸ் ஜெயராஜை கெளரவித்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகிள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.