ஊட்டி மற்றும் கொடைக்கானலை விடவும் குளிரான இடம் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றால், நிச்சயம் கிடையாது. அதேநேரம் சில சமயங்களில் கொடைக்கானலை விடவும் சில இடங்களில் சில சமயங்களில் குளிராக இருக்கும். அப்படித்தான் தேனி பக்கத்தில் மேகமலையும், கொழுக்குமலையும் தற்போது குளிராக இருக்கிறது. இங்கு பொதுவாகவே கொடைக்கானலை போல் தான் வெப்ப நிலை காணப்படும். மழைப்பொழிவு, வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது இது மாறுபடும். பட்ஜெட்டில் தங்கி சுற்றி பார்க்க கொழுக்குமலையும், மேகலையும் அற்புதமான இடங்கள் ஆகும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தான் தமிழ்நாட்டின் மிக குளிரான இடமாகும். அதற்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த இரண்டுமே சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் ஆகும். இங்கு சுற்றுலா செல்ல ஏராளமான இடங்கள் உள்ளன. ஊட்டி மற்றும் நீலகிரி முழுவதையும் சுற்றிப்பார்க்க 3 நாட்கள் முதல் நான்கு நாட்கள் தேவைப்படும். அதேபோல் தான் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க 2 முதல் 3 நாட்கள் முழுமையாக தேவைப்படும். ஏனெனில் அவ்வளவு இடங்கள் உள்ளன.

ஆனால் கோடைக்காலத்தில் தங்கும் விடுதிகளின் வாடகை கொடைக்கானலிலும், ஊட்டியிலும் சில சமயங்களில் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மாற்று இடங்களை தேடுவார்கள். இதேபோல் கொடைக்கானல் வரும் பலர், அப்படியே பக்கத்தில் உள்ள தேனி மாவட்டத்திலும் விசிட் அடித்து வரலாம். இதேபோல் மூணாறு, தேக்கடி செல்பவர்களும் தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து வருவதும் வழக்கம். பலருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள அருவிகளான கும்பக்கரை, சுருளி, சோத்துப்பாறை, சின்ன சுருளி, குரங்கணி போன்ற பகுதிகளை நன்கு தெரியும். இவை எல்லாம் மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகள் ஆகும். அதேநேரம் மலையில் உள்ள கொழுக்குமலை மற்றும் மேகமலை போன்ற பகுதிகள் சுற்றிப்பார்க்க மிக அருமையாக இருக்கும். பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இருக்கும்.

பொதுவாகவே மேகமலை மற்றும் கொழுக்குமலை இரண்டுமே வெயில் சற்று குறைவாகவே உள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாகும். தனிமையில் இயற்கையையும் காடுகளையும் ரசிக்க விரும்புவோருக்கு அற்புதமான இடம் என்றால் அது மேகமலை மற்றும் கொழுக்குமலை தான். ஏனெனில் இரண்டிலுமே தற்போது கொடைக்கானலை விட வெப்பநிலை குறைவாக உள்ளது. காரணம் அங்குள்ள வானிலையில் ஏற்பட்ட மாற்றம் தான். இந்த மாற்றம் தற்காலிகமானது தான். ஏனெனில் கொடைக்கானலில் தான் வெயில் குறைவாக இருக்கும். ஆனால் மேகமலை மற்றும் கொழுக்குமலையில் மலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வெப்பநிலை குறைவாக உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 35 கிமீ தூரத்தில் மேகமலை அமைந்துள்ளது. இங்கு எங்கு திரும்பினாலும் பசுமையான தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள், மேகக்கூட்டங்களின் நகர்வு, எங்கு திரும்பினாலும் அணைகள் என்று ரம்மியமாக இருக்கும். இங்கு அணை மற்றும் ஆறுகள் பசுமையான காடுகள் மட்டுமே உள்ளது. அணைகளில் குளிக்க முடியாது. அருவிகளில் குளிக்கலாம். சூப்பராக இருக்கும். தங்கும் வசதிகளும் பட்ஜெட்டில் உள்ளன. ஆனால் பெரிய அளவில் ஓட்டல்கள் கிடையாது.

அதேபோல்தான் கொழுக்குமலையும்.. கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் ஆண்டு முழுவதும் கொழுக்குமலையில் இருக்கும். இதற்கு குரங்கணி வழியாக டிரக்கிங் போகலாம். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதால் அனுமதி கிடையாது. ஆனால் கேரளா வழியாக வாகனங்களில் செல்லலாம். போடியில் இருந்து போடி மெட்டு, சூரியநெல்லி வழியாக போகலாம். சூரியாநெல்லியில் இருந்து ஜீப்பில் போக வேண்டியது வரும். கொழுக்குமலையில் அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். எப்போதுமே ரம்மியமான சூழல் நிலவும் இங்கு, தங்க வேண்டும் என்றால் முன்பே அனுமதி வாங்க வேண்டும். மூணாறு வரும் யாராக இருந்தாலும் இந்த இடத்தை மறந்தும் மிஸ் பண்ண மாட்டார்கள்.