பருவகால நிலை மாறுபாடு காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுதல் வேண்டும் - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பருவகால நிலை மாறுபாடு காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்தவகையில், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை தடுப்பு குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோடை காலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நேரடியாக வெயிலில் பணியாற்றுபவர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், தொழிலகங்கள், கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், காவல் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறையில் போன்றவைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோர் மிக மிக கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

அச்சமயங்களில் முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலில் வேலை செய்யும் சமயங்களில் ORS கரைசல், எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஓ.ஆர்.எஸ் கரைசல் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வருகிறது

அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பருவ கால பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிகளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் இருப்பது நல்லது. கோடை காலத்தில் வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. மதிய நேரங்களில் குறிப்பாக முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. சூரிய ஒளியில் நேரடியாக வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, காலணிகள் போன்றவற்றை பயன்படுத்துதல் வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்களை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்ககூடும். மேலும், அதிக உடல் வெப்ப நிலையுடன் மயக்கம், குழப்பம் மற்றும் வியர்வையுற்று தோல் உலர்ந்த நிலை போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் யாராவது இருந்தால், உடனடியாக மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை அழைக்கவும். மாவட்டம் முழுவதும் தீ தடுப்பான்கள் மற்றும் அதன் இயங்கும் தன்மை சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெப்பத்தில் பொதுமக்களுக்கு நீர் இழப்பை சரி செய்யும் வகையில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஆரோக்கியத்தினை கடைபிடிக்க வேண்டும்

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தனியாக படுக்கை வசதிகள், தேவையான மருந்துகள், உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக உடல் சோர்வு, தசைபிடிப்பு, மயக்கம், அதிக சோர்வு, குழப்பம் போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெறலாம். தற்போதைய காலநிலையில் நிலவக்கூடிய கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை ஆகியவைகளால் ஏற்படும் பாதிப்புகளை, மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்த்து, பொதுமக்கள் ஆரோக்கியத்தினை கடைபிடிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.