செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே, ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில், தம்பதிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி என்ன ?

கிளாம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம், டி.வி.எஸ். கிரீன் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (61). மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடன், இவரது மனைவி உஷாராணி (57) வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களுக்கு வீட்டு வேலை செய்வதற்கு உதவியாக, கடந்த வாரம் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.

திட்டமிட்டு நடந்த சதி செயல்

நேற்று முன்தினம் இரவு, ராஜேந்திரன் மற்றும் உஷாராணி தம்பதியினர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச் செல்லும் வேளையில், அந்த வேலைக்காரப் பெண் அவர்களுக்குப் பால் கொடுத்துள்ளார். அந்தப் பாலை அருந்திய சிறிது நேரத்திலேயே இருவரும் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை தம்பதியினர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, உஷாராணி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வேலைக்காரப் பெண் வீட்டில் இல்லாததும், வீட்டின் வெளிக்கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக இது குறித்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் அருந்திய பாலில் அந்தப் பெண் மயக்க மருந்து கலந்ததும், அவர்கள் மயங்கிய பிறகு 51 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடியதும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நேபாளப் பெண்ணைப் பிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.