செங்கல்பட்டு மாவட்டம் திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, மின்சாரம் தாக்கி தேர் எரிந்து தேர் சேதமாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரௌபதி அம்மன் கோவில் திருவிழா

கோடை காலத்தில் வட தமிழ்நாட்டில் திரௌபதி அம்மன் கோயில்களில், அக்னி வசந்த திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக வட தமிழ்நாடு பாரம்பரியத்தில் கலந்த திருவிழாவாக இந்த திருவிழா இருந்து வருகிறது. பல இடங்களில் 10 நாட்கள் தொடங்கி 22 நாட்கள் வரை இந்த திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

பாரத திருவிழா எனவும் இந்த திருவிழா அழைக்கப்படுகிறது. இந்த திருவிழாவின்போது, மகாபாரதம் கதை குறித்து சொற்பொழிவுகள் மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளது. அதேபோன்று, தீ மிதி திருவிழா மற்றும் தேர்த் திருவிழாவும் அக்னிவசந்த திருவிழாவின் ஒரு பாகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தேர் திருவிழாவில் நடைபெற்றுள்ள அசம்பாவிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கோவில் அக்னி வசந்த திருவிழா கொடியேற்றத்துடன், நடந்த இரண்டாம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் 22 நாள் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின் ஒரு பகுதியாக, சித்திராங்கதை மாலையிடு நாகக்கன்னி மாலையிடு உற்சவம் நடைபெற்றது.

இரும்பால் செய்யப்பட்ட தேர் டிராக்டர்வைத்து இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவமனை திடல் அருகே வரும் போது, தாழ்வாக இருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியதில் தேர் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. தேருடன் உடன் வந்த ராம்குமார் என்பவர் சம்பவ இடத்தில் மின்சாரம் தாக்கி துடி துடித்து உயிரிழந்தார்.

நான்கு பேர் பாடுகாயம்

உடன் வந்த ஆதிகேசவன்,சிவா, ஜானகிராமன், குப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் இவர்களை பொதுமக்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தி கிராமத்தில் தேர்த்திருவிழாவின் போது மின் கம்பத்தில் தேர் உரசியத்தில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.