காவல் கட்டுபாட்டு வந்த தொலைபேசி அழைப்பு

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றி வரும் இளம்பெண் காவல் துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் தொலைபேசியில் பேசுகையில், தன்னை மர்ம நபர்கள் காரில் வலுக் கட்டாயமாகக் கடத்திச் சென்றதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இறக்கி விட்டுச் சென்று விட்டதாக அழுது கொண்டே கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்

இளம் பெண்ணை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததுள்ளது. உடனடியாக அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இளம்பெண் கூறியபடி கார் எதுவும் வரவில்லை. மாறாக, அவர் ஒரு இளைஞருடன் சகஜமாகப் பேசியபடி நடந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

உண்மையை வெளியிட்ட இளம்பெண்

போலீசார் சிசிடிவி வீடியோவைக் காண்பித்து நெருக்கடி கொடுத்த போது, இளம்பெண் தனது நாடகத்தை ஒப்புக் கொண்டார். அதாவது அந்த இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களைக் காதலித்து வந்துள்ளார். ஒருவர் உள்ளூரிலும், மற்றொருவர் வெளிநாட்டிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

உன் அருகில் இருப்பவர் யார் ?

சம்பவத்தன்று இரவு, உள்ளூர் காதலனுடன் அவர் பேசிக்கொண்டிருந்த போது, வெளிநாட்டில் உள்ள காதலன் போன் செய்துள்ளார். உள்ளூர் காதலன் அருகில் இருந்த போது வெளிநாட்டு காதலனிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர் பேசிய சத்தம் வெளிநாட்டில் இருந்த காதலனுக்குக் கேட்டுள்ளது.

"உன் அருகில் இருப்பது யார் " என்று அவர் சந்தேகத்துடன் கேட்க, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இளம்பெண் கடத்தல் நாடக கதையை உருவாக்கியுள்ளார்.

" யாரோ என்னைக் கடத்துகிறார்கள் " என்று போனில் கத்தி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை உண்மை என நம்ப வைக்கவே, காவல் துறைக்கும் போன் செய்து புகார் அளித்துள்ளார்.

வீணாகப் போலீசாரை அலைக் கழித்தது மற்றும் தவறான தகவல்களை அளித்து அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் அந்த இளம் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.