India Pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் மோதல் இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் வேதனையையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது. தற்போது இந்த தாக்குதல் தற்காலிகமாக நடத்தப்பட்டிருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது இன்று, நேற்றல்ல பாகிஸ்தான் நாடு உருவாகியது முதலே தொடங்கிவிட்டது.

தீவிரவாதிகள் தாக்குதல், எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் அடைந்தது முதலே மோதல் நடைபெற்று வந்துள்ளது. அப்போது எல்லாம் இந்தியாவிற்காக இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிர்களை தியானம் செய்து இந்திய நாட்டை காப்பாற்றியுள்ளனர். பாகிஸ்தானுடனான மோதல் மட்டுமின்றி சீனாவுடனான போரின்போதும் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்திய - பாகிஸ்தான் மோதலில் இதுவரை தாங்கள் உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களின் எண்ணிக்கையை கீழே காணலாம்.

ஜம்மு காஷ்மீர் ஆபரேஷன் :

1947 - 48ம் ஆண்டுகளில் நடந்த ஜம்மு காஷ்மீர் ஆபரேஷனில் 1104 இந்திய வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அந்த மோதலில் 3 ஆயிரத்து 152 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா - சீனா போர்:

1962ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது 3 ஆயிரத்து 250 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த போரில் 548 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் போர்:

1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் 3 ஆயிரத்து 264 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த போரில் 8 ஆயிரத்து 623 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் போர்:

பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டு மீண்டும் நடந்த போரில் இந்தியாவிற்காக 3 ஆயிரத்து 843 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த போரில் 9 ஆயிரத்து 851 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஆபரேஷன் பவன்:

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படையில் 1157 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 3 ஆயிரத்து 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.

கார்கில்:

1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் 524 இந்திய வீரர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். மொத்தம் ஆயிரத்து 363 வீரர்கள் காயம் அடைந்தனர்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்திய ராணுவம் நாட்டிற்காக நடத்திய போர்களில் மட்டும் மொத்தமாக 13 ஆயிரத்து 140 வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

நாட்டிற்காக உயிர் நீத்த இந்திய வீரர்கள் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. போரால் ஏற்படும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தவிர்ப்பதற்காகவே இரு நாட்டுச் சண்டையின்போது பல நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

பகல்ஹாம் பயங்கரம்:

பகல்ஹாமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்த காரணத்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூரை நடத்திய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றனர். இதன்பின்னர், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த முயற்சிக்க இந்தியா தனது பதிலடியை அளித்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற பிறகு அந்த நாடு இந்திய அளவிற்கு பொருளாதாரத்திலோ, தொழில்நுட்பத்திலோ பெரியளவிலோ வளரவில்லை. ஆனால், அந்த நாடு உருவானது முதலே அங்கு தீவிரவாதம் தழைத்தோங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த நாடு இதுவரை பெரிய வளர்ச்சியை அடையாமல் உள்ளது.