மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுநர்களை நேரடியாகத் தாக்கியுள்ளது.

தடாகம் அடுத்துள்ள KNG புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் எரிவாயு நிலையம், ஆட்டோ எல்பிஜி (Auto LPG) விலையை ஒரே நாளில் ₹20 உயர்த்தியதை அடுத்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் விலையேற்றத்தின் பின்னணி

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரப்படும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலின் கூற்றுபடி நகரின் பிற இடங்களில் லிட்டர் ₹64.87-க்கு விற்கப்படும் நிலையில், இங்கு ₹84.99-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் பதில்: விலையேற்றம் குறித்துக் கேட்ட ஓட்டுநர்களிடம், "தேவைப்பட்டால் நிரப்புங்கள், இல்லையென்றால் இடத்தை காலி செய்யுங்கள்" என நிலையம் தரப்பில் காட்டமாகப் பதில் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஓட்டுநர்களின் வாழ்வாதாரச் சிக்கல்

"ஏற்கனவே போர்ச் சூழலால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள இந்த ₹20 உயர்வு எங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும்" என்று டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ் குமார் கவலைய தெரிவித்தார்.

"தினசரி வருமானத்தில் ₹300 முதல் ₹500 வரை இழப்பு ஏற்படும். சவாரி கட்டணத்தை எங்களால் உடனடியாக உயர்த்த முடியாது. இந்த சர்வதேசப் போரைக் காரணம் காட்டி, உள்ளூர் ஏழை மக்களைத் தனியார் நிறுவனங்கள் சுரண்டுவதை ஏற்க முடியாது," எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அரசின் தலையீடு அவசியம்

தற்போது நிலவும் சர்வதேச நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி, தனியார் எரிபொருள் நிலையங்கள் தங்களுக்குத் தோன்றும் விலையை நிர்ணயிக்காமல் இருக்க, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், ஒட்டுமொத்த போக்குவரத்துத் தொழிலே முடங்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.