தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்! ஏழை,. எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் செங்கொடி-அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் உயிர் காக்க கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி தீக்குளித்து தியாகியான காஞ்சிபுரம் செங்கொடியின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி உயிர் நீத்த அரியலூர் அனிதாவின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

தியாகிகள் செங்கொடி, அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்தியாவில் வசிக்கின்ற இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களுக்கான அகதிகள் முகாம்கள் கலைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்,

ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வியில். 20% இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் வெ.சேவையா, அழகு.தியாகராஜன், விசிக நிர்வாகி அ.யோகராஜ், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழர் தேசிய முன்னணி நிர்வாகி சதா.முத்துக் கிருஷ்ணன், எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், மாவட்ட தலைவர் செல்வராஜ், என்டிஎல்எப் ஒருங்கிணைப்பாளர் நா.சாமிநாதன், நிர்வாகிகள் பி.மாரிமுத்து, பக்ருதீன் முகமது, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், திலீப்குமார், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செங்கொடி, அனிதா உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.