தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான காட்சிகளில் ஒன்றாகவும், வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சிகளில் ஒன்றாகவும் இருக்கும் கட்சி பாமக. ஆனால், தந்தை - மகன் இடையே நடக்கும் உச்சகட்ட சண்டையால் பாமக இன்று இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.

ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு:

இந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு நடத்திய நிலையில், இன்று ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. ராமதாஸ் மனைவியார் சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளில் அன்புமணி - ராமதாஸ் இருவரும் ஒன்றாக பங்கேற்றதால் இவர்களது பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அனைவரும் கருதினர். ஆனால், திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்தார்.

பறிபோகிறதா அன்புமணி பதவி?

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழு நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் ராமதாஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து ராமதாஸின் முடிவுகளுக்கு முரண்பாடாகவே கருத்து தெரிவித்து வரும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, அவரது செயல்தலைவர் பதவியை பறித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பதவியை அவரது மகளான ஸ்ரீகாந்திமதிக்கு தர உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. மேலும், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்குவாரா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு:

இதனால், இன்றைய கூட்டத்தில் ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதற்காக பாமக-வின் அடிமட்ட தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பாமக-வின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் அன்புமணியின் பக்கம் இருக்கும் சூழலில், பாமக-வின் தான் எடுப்பதே முடிவு என்று திட்டவட்டமாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வருகிறார்.

ஆனால், கூட்டணி குறித்தும், கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுகளையும் நானே எடுப்பேன் என்று ராமதாஸ் ஒவ்வொரு முறையும் கூறி வருகிறார். கட்சி விதிப்படி தற்போது பாமக தலைவர் அன்புமணிக்கே அதிகாரம் உள்ளது. ராமதாஸ் - அன்புமணி மோதல் சமாதானம் ஆகாமல் உச்சத்திற்கு சென்றால், சட்டமன்ற தேர்தலில் பாமக யார் பக்கம் நிற்கும்? மாம்பழ சின்னம் யாருக்கு? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.

பாமக-வில் நடக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதலை முடிவுக்கு கொண்டு வர கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கூட்டணி யார் பக்கம் செல்வதில்தான் இந்த பிரச்சினை தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், முகுந்தனுக்கு பதவி வழங்கியதில் இந்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்தது.

ராமதாஸ் - அன்புமணி மோதலால் கட்சியின் கீழ்மட்டத்தில் இவர்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது கூட்டணி கட்சியினர் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதனால், ஒருங்கிணைந்த பாமக-வாக ராமதாஸ் - அன்புமணி இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக - பாஜக தரப்பு முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.