போபாலில் மோசமாக கட்டப்பட்ட பாலத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், அந்த பாலத்தை கட்டிய 7 இன்ஜினியர்களை மத்திய பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

இன்ஜினியர் பரிதாபங்கள்:

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், 90 டிகிரி வளைவுடன் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் அந்த பாலம் கட்டப்பட்டதால் பலரும் விமர்சிக்க தொடங்கினர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதன் புகைப்படம் வைரலாகி, நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்தனர்.

இந்த நிலையில், பாலத்தை கட்டிய 7 இன்ஜினியர்களை மத்திய பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "ஐஷ்பாக் ஆர்.ஓ.பி. பாலத்தை கட்டுவதில் அலட்சியமாக செயல்பட்டதை நான் அறிந்துகொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டேன்.

90 டிகிரியில் கட்டப்பட்ட பிரிட்ஜ்:

விசாரணை அறிக்கையின் அடிப்படையில், எட்டு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தலைமைப் பொறியாளர்கள் உட்பட ஏழு பொறியாளர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில், ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் பொறியாளர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்.

கட்டுமான நிறுவனம் மற்றும் வடிவமைப்பு ஆலோசகருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ROB-யில் தேவையான மேம்பாடுகளைச் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மேம்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ROB பாலம் திறக்கப்படும்" என்றார்.

கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மாண்ட்லோய் கூறுகையில், "தலைமை பொறியாளர்கள் சஞ்சய் காண்டே மற்றும் ஜி.பி. வர்மா, பொறுப்பு நிர்வாக பொறியாளர் ஜாவேத் ஷகீல், பொறுப்பு துணைப்பிரிவு அதிகாரி ரவி சுக்லா, துணைப் பொறியாளர் உமாசங்கர் மிஸ்ரா, உதவி பொறியாளர் ஷானுல் சக்சேனா, பொறுப்பு நிர்வாக பொறியாளர் ஷபானா ரஜ்ஜாக் மற்றும் ஓய்வுபெற்ற மேற்பார்வை பொறியாளர் எம்.பி. சிங் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ऐशबाग आरओबी के निर्माण में हुई गंभीर लापरवाही में मैंने संज्ञान लेते हुए जाँच के आदेश दिये थे। जाँच रिपोर्ट के आधार पर लो.नि.वि. के 8 इंजीनियर्स के खिलाफ कार्रवाई की गई है। दो सीई सहित सात इंजीनियर्स को तत्काल प्रभाव से निलंबित किया गया है। एक सेवानिवृत एसई के खिलाफ विभागीय जाँच…

— Dr Mohan Yadav (@DrMohanYadav51) June 28, 2025

18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த ஆர்ஓபி பாலம், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர் மற்றும் நியூ போபால் நிலையப் பகுதிக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்டது. இதனால், சுமார் மூன்று லட்சம் மக்கள் பயனடைவார்கள்.