விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் விழுப்புரம் வன கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காடுகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருந்து கண்காணிக்க 120 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் உட்கோட்ட காடுகள் தீவிர கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் 61.470 ஏக்கர் பரப்பளவில் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காடுகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், மரக்காணம், செஞ்சி, மயிலம், கண்டாச்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வனச்சரக அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த வனங்களில் கடந்த 2 ஆண்டுகளாக, நடத்திய வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்பில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்த கொண்டே செல்வது கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் உள்ள காடுகளில், முயல், புள்ளிமான், குரங்கு, மலைப்பாம்பு, கரடி, சாம்பல் நிற அணில், அறிய வகை பாம்புகள், பறவை வகைகள், உடும்பு, முள்ளம்பன்றி, ஆமைகள் உள்ளன.

பறவைகள் இனம் அழிகிறது

இந்த உயிரினங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளாக 30 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக, வனத்துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. உதாரணமாக, முயல், புள்ளிமான் மற்றும் பறவை வகைகள், தண்ணீர் இல்லாததால் வெளியே நெடுஞ்சாலை பகுதிக்கு செல்வதால் வாகனங்களில் விபத்துக்குள்ளாகி இறக்கிறது. பறவைகள் வேட்டையாடப்படுவதால் இதன் இனம் அழிகிறது. இது போன்ற சூழலால் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வனத்தில் விலங்குகள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஏற்பாடுகளை செய்து, விலங்குகளின் வருகையை அதிகப்படுத்த வேண்டும் என வனத்துறை உயர் அதிகாரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் வன விலங்குகளின் பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான ஆயத்த பணிகளை வனத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருந்து கண்காணிக்க 120 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம்

அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறை அலுவலர்கள், சூரிய ஒளி மின்சாரம் மூலம் நீர் தொட்டிகளில் எந்த நேரமும் தண்ணீர் நிரம்பிய நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதே போல், வேட்டை தடுப்பு காவலர்கள், விழுப்புரம் வன கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காடுகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருந்து கண்காணிக்க 120 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக கண்காணிக்க காடுகளில் டவர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கழுவேலி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் பாதுகாப்பாக வந்து செல்வதை கண்காணிக்கவும், வனத்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு முதல் விழுப்புரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதற்கான பணிகளில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.