புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பெனடிக்ட் மென்னி உளவியல் - சமூக மறுவாழ்வு மையம். அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராகி எனும் பெண் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மரண படுக்கையில் இருந்தபோது தனது கடைசி ஆசையை கூறியுள்ளார்.

இந்து முறைப்படி தனக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தனது உறவினர்கள் மற்றும் சொந்த ஊர் உள்ளிட்டவை நினைவில் இல்லை. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் உயிரிழந்துள்ளார். அவர் சிகிச்சை பெற்று வந்த மையத்தை கன்னியாஸ்திரிகள் பராமரித்து வந்தனர். அவர்கள் சிட்டாட்டுமுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த சஃபீர், உயிரிழந்த அந்த பெண்ணின் கடைசி ஆசைப்படி, அவருக்கு மகன் ஸ்தானத்தில் முன்னின்று இறுதி சடங்குகளை இந்து முறைப்படி சஃபீர் செய்துள்ளார்.

“உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை கண்டுபிடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் யாரேனும் ஒருவர் தனது கடைசி ஆசையை சொல்லும் போது, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அதைதான் எனது மதம் எனக்கு போதித்துள்ளது. எனது வார்டில் அனைத்து மத சமூகத்தை சேர்ந்த மக்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் இன்னும் பிற செயல்பாடுகளில் நான் அடிக்கடி பங்கேற்பதால், அந்த சடங்குகள் குறித்து எனக்கு ஓரளவு பரிச்சயம்.

அதோடு தகனக் கூடத்தில் இருந்தவரும் எனக்கு வழிகாட்டினார். இந்த சடங்குகளை மேற்கொள்ள எனது மதம் எனக்கு தடையாக இல்லை. உள்ளூர் ஜமாத்தின் இமாம் என்னை வாழ்த்தினார். இது சரியான செயல் என்று அவர் கூறினார்”என்று சஃபீர் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பும் இதே போல உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்த ஒருவருக்கு இறுதி சடங்குகளை செய்துள்ளார் சஃபீர். இந்நிலையில், அவரது செயல் குறித்து அறிந்த கேரள நெட்டிசன்கள் ‘தி ரியல் கேரளா ஸ்டோரி’ என புகழ்ந்து வருகின்றனர்.