கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைத்துக் கொடுத்ததாகக் கூறினார். ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் நேருவின் பங்களிப்பு முக்கியமானது என்றும், அவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. முறைகேடுகள் கல்வி அமைப்பை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் போராட்டங்களில் நியாயம் இருப்பதாகவும், மத்திய அரசு இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் உரை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவை மண்டலத்தில் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிடப்பில் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், “தற்போதைய சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலக் குழு கூடி, அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜனநாயக சக்திகளுடன் இணைந்து முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக சக்திகள் எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலன் மற்றும் வர்க்க நலன் அடிப்படையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியல் நிலைப்பாடுகளை தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.