வாடகை பிரச்சனையால் தொடர்ந்த வழக்கு

சென்னை புரசைவாக்கம் மூக்காத்தால் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 41 ) இவருக்கு ஓட்டேரி கிருஷ்ண தாஸ் மெயின் ரோடு பகுதியில் சொந்த வீடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூபஸ் என்பவருக்கு அந்த வீட்டை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார் கார்த்திக். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூபஸ் வாடகை தராமல் கார்த்திகை ஏமாற்றி வந்துள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த பிரச்சனை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் , குறிப்பிட்ட அந்த வீட்டில் பொதுவான இடத்தில் ரூபஸ் கோழி வளர்த்து வந்துள்ளார். கார்த்திக் இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கார்த்திக் இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி‌ மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விசாரிக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ரூபஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் போலீசாரை பார்த்து கோபமடைந்து எப்படி இந்த வழக்கை நீங்கள் விசாரிப்பீர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது , திடீரென உதவி ஆய்வாளர் உமாபதியை மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உமாபதிக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஓட்டேரி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டேரி கிருஷ்ண தாஸ் மெயின் ரோடு பகுதி யைச் சேர்ந்த ரூபஸ் டேவிஸ் ( வயது 49 ) மற்றும் அவரது மகன் டார்வின் ( வயது 25 ) இரண்டாவது மகன் டால்டோன் சாமு வேல் ( வயது 20 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும் ரூபஸ் டேவிஸின் மனைவி லட்சுமி ( வயது 45 ) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார். கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏ.ஏ சாலை பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஆம்னி காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் ஆம்னி காரை திறந்து பார்த்த போது அதில் அழுகிய நிலையில் சுமார் 50 வயதுடைய நபரின் உடல் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த உடலை மீட்ட வியாசர்பாடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடியை சேர்ந்த ரபேல் ( வயது 55 ) என்ற நபர் வியாசர்பாடி ஏ.ஏ சாலை பகுதியில் பழைய கார்களை சரி செய்யும் கடை வைத்து நடத்தி வருவதாகவும் இந்த கடைக்கு வந்த பல கார்கள் அந்த தெரு நடை பாதையில் நிறுத்தி வைக்கபட்டிருந்த தாகவும் பல ஆண்டுகளாக அதனை யாரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும், அதே பகுதியில் கூலி வேலை செய்து நடைப் பாதையில் பிழைப்பு நடத்தும் சண்முகம் ( வயது 75 ) என்பவர் குடிபோதையில் சம்பவத்தன்று காரில் படுத்து உறங்கியதும் அதன் பிறகு அவர் காரிலேயே இறந்து விட்டதும் இரண்டு நாட்களாக யாரும் அதை கவனிக்காததால் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து வியாசர்பாடி போலீசார் சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.