புற்று நோயால் அவதிப்பட்ட மனைவி

சென்னை பெரம்பூர் சங்கராச்சாரி மடம் பகுதியை சேர்ந்தவர் சகாயம் செபாஸ்டின். இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் வேர் ஹவுஸில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பியூலா ( வயது 37 ) என்ற மனைவியும் , யுவன்ஹாண்டோ ( வயது 4 ) இவாஞ்சலி ( வயது 8 ) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் செபாஸ்டின் மனைவி பியூலா நீண்ட காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு புற்று நோய் முற்றிய நிலையில் இருந்துள்ளார். பல்வேறு மருத்துவ சிகிச்சை அளித்தும் பியூலா உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்துள்ளனர்.

" உலகத்தில் வாழ வேண்டாம் "

ஒரு கட்டத்தில் செபாஸ்டின் இந்த உலகத்தில் வாழ வேண்டாம் என முடிவு செய்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள எண்ணியுள்ளார். இதனை தொடர்ந்து செபாஸ்டின் இரவு வீட்டருகே உள்ள கேக் கடைக்கு சென்று கேக் வாங்கி வந்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். கேக் சாப்பிட்ட சில நிமிடங்களில் மகன் யுவன் ஹாண்டோ மயங்க விழுந்தார். அவரை தொடர்ந்து மனைவி மற்றும் மகள் இருவரும் மயங்கி விழுந்ததை பார்த்த செபாஸ்டின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் தொங்கிய நிலையில் கணவர் - போலீசாருக்கு தகவல்

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இவாஞ்சலி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு சென்று
கதவை திறந்து பார்த்த போது செபாஸ்டின் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி பிள்ளைகள் தரையில் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செம்பியம் காவல் துறையினர் நான்கு பேரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு பேரை பரிசோதித்த மருத்துவர்கள் செபாஸ்டின் அவரது மகன் யுவன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பியூலா, அவரது மகள் இவாஞ்சலி இருவருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் போலீஸார் தந்தை மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேக்கில் விஷம் கலந்து கொலை

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட செபாஸ்டின் தன் மனைவி முற்றிய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள எண்ணி கடையில் இருந்து கேக் வாங்கி வந்து அதில் விஷத்தை கலந்து கொடுத்து மனைவி, மற்றும் இரு பிள்ளைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதில் மனைவி மற்றும் மகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து செம்பியம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.