கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் வட்டார கிராமங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த ஆலங்கட்டி மழையால் விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக, 12 மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி கரையாமல் கிடந்தது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் அன்னூர் அருகே உள்ள செங்கப்பள்ளி, கனுவக்கரை, ஆம்போதி, பச்சாக்கானூர் உள்ளிட்ட பல்வேறு ஊரக பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. வழக்கமாக ஆலங்கட்டி மழை பெய்தாலும், சிறிது நேரத்தில் பனிக்கட்டிகள் கரைந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த முறை பெய்த ஆலங்கட்டி மழை மிகவும் தீவிரமாக இருந்ததால், பெரிய அளவிலான பனிக்கட்டிகள் நிலத்தில் தேங்கி நீண்ட நேரம் கரையாமல் இருந்தன.

12 மணி நேரமாக கரையாத பனிக்கட்டி

இந்த திடீர் ஆலங்கட்டி மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நான்கு மாத வயதுடைய வாழைத் தோட்டங்கள், பாக்கு மரங்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து அதிக வேகத்தில் விழுந்த ஆலங்கட்டி கற்கள் நேரடியாக பயிர்களை தாக்கியதால் இலைகள் கிழிந்தும், கொடிகள் முறிந்தும், பல ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுவரை இந்த அளவுக்கு ஆலங்கட்டி மழை பெய்ததில்லை என்றும், இயற்கை பேரிடரைப் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து 12 மணி நேரம் கடந்த பின்னரும் பனிக்கட்டிகள் சாலையோரம் மற்றும் தோட்டங்களில் கரையாமல் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட சேதத்தை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அன்னூர் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.