இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டம் கேரளத்தின் மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. இது கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும் ஏறத்தாழ 20%. தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலா வட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி ஏறத்தாழ 50% காடுகளும் மலைகளுமே. மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை மாவட்டத்தின் இரண்டு உத்தியோகபூர்வ நிர்வாக மொழிகள். இடுக்கி மாவட்டத்தில் மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அதிகமாக பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.

ஆசியாவில் உள்ள உயரமான வளைவு அணைகளுள் (Arch Dam) இது இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணையை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஓணம் பண்டிகை மற்றும் புத்தாண்டு தினம் ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மற்ற நாட்களில் இந்த அணைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலையில் கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை களைகட்டி வருகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் இடுக்கி அணையை பார்வையிட இன்று (செப்டம்பர் 1, திங்கட்கிழமை) முதல் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.15 மணி வரை அணையை பார்வையிடலாம். ஒரே நேரத்தில் 20 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அணை பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை அன்று மட்டும் அனுமதி இல்லை. அணையின் மேல் பகுதியில் நடந்து செல்லக்கூடாது. பேட்டரி கார்களில் மட்டுமே சென்று அணையின் மேல் பகுதியில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பெரியவர்களுக்கு ரூ.150-ம், குழந்தை களுக்கு ரூ.100-ம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் நுழைவுக் கட்டணமும், பேட்டரி காருக்கான கட்டணமும் அடங்கும்.https://www.keralahydeltourism.com/ என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்களை ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

அணையை பார்வையிட செல்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மது குடித்துவிட்டு செல்பவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படும். ஷட்டர்கள் திறக்கப்படும் நாட்களிலும், சிவப்பு அல்லது ஆரஞ்சு மழை எச்சரிக்கைகளின் போதும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாட்களிலும் அணையை பார்வையிட தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அணையை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் மொபைல் போன், கேமராக்கள் அல்லது வேறு மின்னணு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இடுக்கி அணை தேனி மாவட்டத்தை ஒட்டி இருப்பதால் தேனி வழியாக குமுளி அல்லது கம்பம்மெட்டு சென்று அங்கிருந்து இடுக்கி அணைக்கு செல்லலாம்.