தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு, ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுக்க கோலாகலமாக நடந்தது.

தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் நின்று போனது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015ம் ஆண்டு முதல் இந்த சித்திரைத் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்.23ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், 15ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.

பின்னர், காலை 6.15 மணியளவில் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷங்கள எழுப்ப இழுக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், எம்.பி., முரசொலி, மாவட்ட எஸ்.பி., ரா. ராஜாராம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க. கண்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் புறப்பட்டன. தேருக்கு முன்னே சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

மேலும், பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேலவீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நின்று சென்றன.

மேலும், தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து வழங்கினர். இவ்விழாவை ஒட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்திருவிழாவை பார்ப்பதற்காகவும், பங்கேற்பதற்காகவும் தஞ்சை பகுதி மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தஞ்சைக்கு வந்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மாநகராட்சி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. குடிநீர் மற்றும் சுகாதாரப்பணிகள் செய்யப்பட்டு இருந்தது.

கீழ அலங்கம், வடக்குவீதி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு நீர்மோர், பானகம், பிஸ்கெட், தர்பூசணி போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர். சில இடங்களில் அன்னதானமும் அளிக்கப்பட்டது.