ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...

2 weeks ago 4
ARTICLE AD

கோவை நகரில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிட்ரா மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கோவையில் நள்ளிரவு நேரங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிட்ரா பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு எதிரே சில இளைஞர்கள் மது போதையில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்து, கூச்சலிட்டு ஆட்டம் போட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சில இளைஞர்கள் பைக்குகளின் சைலன்சர்களை மாற்றி, அதிக சத்தத்துடன் ஆபத்தான முறையில் பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் செல்வோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பைக் ரேஸ் மற்றும் வீலிங் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், கோவை மாநகர காவல்துறை நள்ளிரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article