Bhopal Apartment: மகனை காப்பற்றும் முயற்சியின் போது உருவான அதிகப்படியான மன அழுத்தத்தால் நெஞ்சு வலி ஏற்பட்டு தந்தை உயிரிழந்துள்ளார்.

மரண ஓலம்

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஆபத்தில் சிக்கிய மகனை காப்பாற்ற ஓடிய தந்தை, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. லிஃபிடில் சிக்கிய மகன் பாதுகாப்பாக வரவேண்டும் என்ற பதற்றத்தில் இருந்த தாய்க்கு, காப்பாற்ற சென்ற கணவன் இறந்துவிட்டார் என்ற செய்தி பேரிடியாக இறங்கியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் ஒரு குடும்பமே நிலைகுலைந்துபோன இந்த சம்பவம் ராயல் ஃபார்ம் வில்லா காலணியில் அரங்கேறியுள்ளது.

திடீரென நின்ற லிஃப்ட்

கடந்த திங்களன்று இரவு ஹோசங்காபாத் சாலை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட மின்வெட்டால் அந்த பகுதியில் இருட்டில் மூழ்கியது. இதனிடையே, 51 வயதான ரிஷிராஜ் படாநகர் என்பவர், இரவு உணவருந்தி விட்டு கீழே நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது தனது 8 வயது மகனான தேவ்னாஷ் கீழே விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு, வீட்டுக்கு செல்ல வலியுறுத்தியுள்ளார். அந்த சிறுவனும் லிஃப்ட் ஏறி வீட்டிற்கு புறப்பட்டுள்ளான். அப்போது தான் பலத்த காற்று காரணமாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டு, லிஃப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் பயந்த சிறுவன் அப்பா.. அப்பா என கத்த தொடங்கியுள்ளான். லிஃப்ட் கதவின் மெல்லிய ஓட்டை வழியாக இந்த சத்தம் கேட்க, ரிஷிராஜ் பதற்றமடைந்துள்ளார். உடனடியாக வேகமாக ஓடி வாட்ச்மேனை அணுகி, ஜெனரேட்டரை ஆன் செய்துள்ளார். மின்சாரம் திரும்ப, சிறுவனும் பாதுகாப்பாக லிஃப்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றுள்ளான்.

மகனை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்த சோகம்:

அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக ரிஷிராஜ் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், ஏற்கனவே ரிஷிராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான அழுத்தம், அச்சத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அன்று காலை தான் தனது கணவன் நல்ல உடல் நடத்துடன் இருக்க வேண்டும் என கோரி, ரிஷிராஜின் மனைவி பருல் சாவித்ரி மேற்கொண்ட நிலையில் இரவே கணவன் உயிரிழந்துள்ளார். ரிஷிராஜின் தந்தையும் இதேபோன்று, ஒரு மாலையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

யார் இந்த ரிஷிராஜ்:

ரியல் எஸ்டேட் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரிஷிராஜின், மூத்த மகன் அண்மையில் தான் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாவது மகனான தேவ்னாஷ் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். குடும்பத்தின் மீது மிகுந்த அன்புகொண்டவராக திகழ்ந்த அவர், அபார்ட்மெண்ட் கமிட்டியிலும் தீவிரமாக இருந்ததகாவும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவ சுணக்கம் காட்டமாட்டார் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மகனை காப்பற்றும் முயறிசியில் நொடிநேரத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.