மேற்குவங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போாட்டம் தீவிரம் அடைந்த நிலையில், இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இந்து அமைப்புகளும், பாஜகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மம்தாவுக்கு நெருக்கடி தர பாஜக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மம்தாவின் கோட்டை:

கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்டு வந்த மேற்குவங்கத்தில் அவர்களை வீழ்த்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி. 34 ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஆட்சியை கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முடிவுக்கு கொண்டு வந்தார் மம்தா.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு குறைந்து, பாஜக வளர்ச்சி அடைய தொடங்கியது. குறிப்பாக, கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு, மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.

சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரம், கொல்கத்தா ஆர். ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து பாஜக தீவிர போராட்டத்தை முன்னெடுத்தது. இருப்பினும், அரசியல் ரீதியாக அவை பாஜகவுக்கு பெரிய பலன் கொடுக்கவில்லை.

பற்றி எரிந்த முர்ஷிதாபாத்:

இந்த நிலையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள ஷம்ஷெர்கஞ்ச், சுதி, துலியன், ஜாங்கிபூர் ஆகிய பகுதிகளில் நடந்த போராட்டத்திலும் பெரும் கலவரம் வெடித்து வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி அரசின் முகாம்களில் தங்கியுள்ளனர். இதை மேற்கோள் காட்டி இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்து நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி, "நான் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். இன்னும் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். குறைந்தபட்சம், தேர்தலின் போது இரண்டு மாதங்களுக்காவது ராணுவத்தை அழைத்து வாருங்கள். அவர்கள் நிறுத்தப்பட்டால்தான், நியாயமான தேர்தல் நடக்கும்" என்றார்.

தேர்தலுக்கு முன்பு குடியரசு தலைவர் ஆட்சியா?

முன்னதாக, மால்டாவில் உள்ள ஒரு பள்ளியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "இந்த முகாமில் உள்ள குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். அவர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தினேன். அவர்களின் குறைகளைக் கேட்டேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். நிச்சயமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்கள் மிரட்டப்பட்டதாக என்னிடம் சொன்னார்கள். குற்றவாளிகள் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களை தாக்கி, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் அனைவரும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்" என்றார்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேற்குவங்க அரசு, "வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. மாவட்டத்தில் வன்முறையை அடக்க காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.