ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் - ஏமாற்றிய நிறுவனம்

சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு துறையில் ஓய்வு பெற்ற 70 வயது பெண் ஆன்லைன் முதலீட்டு விளம்பரத்தை பார்த்து 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 - ம் தேதி முதல் , 2025 ம் ஆண்டு ஜனவரி 18 - ம் தேதி வரை ரூ.2.49 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது முதலீடு நிறுவனமான எச்.இ.எம்., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தினர் பல்வேறு காரணங்கள் கூறி பணத்தை எடுக்க விடாமல் தடுத்துள்ளனர்.

மத்திய குற்றப் பிரிவு - தனிப்படை அமைப்பு

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் , சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் தனிப்படை அமைத்தனர். விசாரணையில் , மோசடி செய்த பணத்தை அனுப்ப திருப்பூர் ஸ்ரீசாய் கிருஷ்ணா ஹோட்டலுக்குச் சொந்தமான கரூர் வைஷ்யா வங்கி கணக்கை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் முக்கிய குற்றவாளிக்கு , அக்கணக்கிலிருந்து தொகையை அனுப்பி , திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் ( வயது 32 ) தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ( வயது 32 ) ஆகிய இருவரும், கமிஷன் தொகையை வாங்கியதும் தெரியவந்தது.

இருவரையும் துாத்துக்குடியில் , சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டோரிடம் இருந்து , மூன்று மொபைல் போன்களும் , ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் , இதே போல் பல வங்கி கணக்குகளை துவங்கி, மோசடி கும்பல்களுக்கு பரிவர்த்தனை செய்து கமிஷன் தொகை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தும், பல்வேறு மாநிலங்களில், சைபர் கிரைம் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்

சென்னை கொடுங்கையூர் கருணாநிதி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு ( வயது 48 ) வெல்டிங் வேலை செய்கிறார். அவரது மனைவி குமரேஸ்வரி ( வயது 45 ) இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் கணவன் - மனைவி, இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த பாபு குமரேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாபு, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குமரேஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு இடது கட்டை விரல் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. குமரேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கோவில் உண்டியலை உடைத்து திருடிய இருவர் கைது

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பெரிய சாலை அருகே நவசக்தி கடம்பாடி ஆலயம் உள்ளது. இதன் பின்பக்கம் உள்ள வினோபாஜி தெருவில் நரசிம்ம ஆலயம் அமைந்துள்ளது. காலையில் , நவசக்தி கடம்பாடி கோவிலை திறந்த போது , உண்டியலையே காணவில்லை. மேலும் நரசிம்ம கோவில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் இருந்து 5,000 ரூபாயும் திருடப்பட்டிருந்தது. புகாரின் படி மாதவரம் போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனர். இதனிடையே மாதவரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் மயிலாடுதுறை, தரங்கம்பாடி தெற்கு தெருவை சேர்ந்த அய்யப்பன் ( வயது 21 ) மற்றும் மாதவரம், பொன்னியம்மன்மேடு அய்யர் தோட்டத்தை சேர்ந்த வடிவேலு ( வயது 26 ) எனவும், இருவரும் கோவில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2,600 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.