அரசுப் பள்ளிகளில் கணினி கல்வியை குழிதோண்டிப் புதைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா, 60,000 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை திராவிட மாடல் கேள்விக்குறியாக்கி உள்ளதாக, குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’செயற்கை நுண்ணறிவு (AI), பிளாக்செயின் (Blockchain) என உலகம் நான்காம் தொழிற்புரட்சியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் என்ற ஒரு பாடமே முறையாக இல்லை என்பது இந்த 'திராவிட மாடல்' அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சாட்சியமாக நிற்கிறது.

கணினியை இயக்கக் கூடத் தெரியாமல் நம் மாணவர்கள் தொழில்நுட்பப் புரட்சியிலிருந்து அந்நியப்படுத்தப்படும் அதேவேளையில், தகுதியிருந்தும் வேலையில்லாமல் 60,000-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இவர்களுக்கான ஊதியத்தை வழங்கத் தயாராக இருந்தும், இந்த விடியா அரசு இவர்களை வஞ்சிக்கிறது.

மத்திய அரசின் தரவுத்தளத்தில் மாபெரும் பொய் - திமுக அரசின் டிஜிட்டல் மோசடி!

2022-ஆம் ஆண்டிலேயே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் (ICT Labs) அமைக்கப்பட்டு, முழுநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் 'UDISE+' தரவுத்தளத்தில் அப்பட்டமான பொய்யைத் பதிவு செய்து, மத்திய அரசை ஏமாற்றியுள்ளது இந்த திமுக அரசு. ஆனால், இரண்டாண்டுகள் கழித்து,
2024-ல் தான், அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே கணினி ஆய்வகங்கள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இது நிதியைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் டிஜிட்டல் மோசடி.

ஆசிரியர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற அவமதிப்பு - தகுதியானவர்களுக்கு துரோகம்!

பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக, கணினி அறிவியலில் பி.எட். (B.Ed.) பட்டம் பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, கேரளாவைச் சேர்ந்த 'KELTRON' என்ற தனியார் நிறுவனம் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த 'இல்லம் தேடி கல்வி’ திட்டப் பணியாளர்களை நியமித்து
வருகிறது இந்த அரசு.

அவர்களைக் கொண்டு EMIS எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு பணிகளையும்,DATA ENTRY வேலைகளையும் செய்வது, முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற 60,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல்
ஆசிரிர்களின் வயிற்றில் அடிக்கும் செயல். மத்திய அரசு கணினி ஆசிரியர்களின் ஊதியத்திற்காக நிதியை வழங்கும் நிலையில், அவர்களை நியமிக்காமல் தற்காலிகப் பணியாளர்களை வைத்து ஏமாற்றுவது யாருடைய நலனுக்காக? இது அப்பட்டமான துரோகம்.

மத்திய அரசின் நிதியை முறைகேடு செய்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக அரசு!

ஒருபுறம் மத்திய அரசு நிதி தரவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், மறுபுறம் கொடுத்த நிதியை கையாடல் செய்வதும் திமுக அரசின் வாடிக்கையாகிவிட்டது. 2021 ஆண்டு முதல் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா ICT திட்டத்தின் கீழ் கணினி ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர் ஊதியங்களுக்காக வழங்கப்பட்ட நிதியை இந்த திமுக அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை.

இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி, முழுப் பணத்தையும் முறைகேடு செய்துள்ளது. மேலும், ₹1076 கோடி மதிப்பிலான ஆய்வகங்கள் அமைக்கும் டெண்டரை, தமிழ்நாட்டில் தகுதியான நிறுவனங்களே இல்லாதது போல, கேரள நிறுவனத்திற்கு வழங்கியதன் மர்மம் என்ன?

இரண்டு நாள் பயிற்சியில் கணினி வல்லுநர்கள் - விடியா அரசின் விபரீத விளையாட்டு!

ஏற்கெனவே, சுமார் ஒரு லட்சம் ஆசிரியர் காலிப் பணியிடங்களால் தவித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவது போல, அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு இரண்டே நாட்களில் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.

கணினியை எப்படி இயக்குவது என்ற அடிப்படை கூடத் தெரியாத மாணவர்களுக்கு, 'TN SPARK' மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) பாடம் எடுக்கப் போவதாகக் கூறுவது. அ, ஆ தெரியாத குழந்தைக்கு கற்பராமாயணம் நடத்துவதைப் போல உள்ளது. இந்த விடியா அரசு, புத்தகங்களை வெளியிட்டுவிட்டதே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

பாஜக இளைஞர் அணியின் சார்பாக திமுக அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்:

மத்திய அரசின் 'UDISE+' தரவுத்தளத்தில் பொய்த் தகவல் அளித்து, நிதியைப் பெற முயன்றது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசின் நிதி உதவியைப் பயன்படுத்தி, தகுதியான, B.Ed., பட்டம் பெற்ற 60,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் ஆசிரியர்களை உடனடியாக நிரந்தரப் பணியில் நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

'TN SPARK' போன்ற கண்துடைப்புத் திட்டங்களைக் கைவிட்டு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு முழுமையான, தனிப் பாடமாக அறிவித்து, அண்டை மாநிலங்களுக்கு இணையாக முறையான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்தது குறித்தும், வெளிமாநில நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சொல்லில் வீரர்கள், செயலில் பூஜ்ஜியம் என்பதை திமுக அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.

இனியும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக இளைஞர் அணி வேடிக்கை பார்க்காது. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.