தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சி மயிலாடுதுறை அளிக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு வாயிலாகத் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித்துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற 70 காலிப் பணியிடங்கள் முதல் நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை விரித்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்றவை வாயிலாக நிரப்ப விளம்பர அறிவிப்பு https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணபத்திற்கான தகுதிகள்

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 34 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி 30.04.2025 எனவும் முதல்நிலை கொள் குறி வகை எழுத்து தேர்வானது 15.06.2025 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம்

அதேபோன்று தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுக்கா மற்றும் ஆயுதப்படை) நிலையில் 1352 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க 20 முதல் 30 வயதிற்குட்பட்ட, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மேற்கண்ட தேர்வுகளுக்கான இதர தகுதிகள் உட்பட அனைத்து விவரங்களுக்கும் தொடர்புடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

மேற்கண்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக 15.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்குப் பாட குறிப்புகள் இலவசமாகத் தரப்படும். இத்தேர்விற்கு விருப்பமுள்ள தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு

மேற்கண்ட தேர்வுகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு, பயிற்சி வழங்கப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநராகத் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பயிற்றுநர்கள் தினசரி பாடக்குறிப்புகள், PPT முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரித் தேர்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள் ஆகியவற்றை தயார் செய்து வழங்க வேண்டும்.

எனவே, மேற்கண்ட தேர்வுகளில் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமிக்க இளைஞர்கள், இளைஞிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை
[email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதோடு 15.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் முன்பதிவிற்கு 9499055904 என்ற WHATSAPP எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.