சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87 வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார். 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பத்மஶ்ரீ , பத்மபூஷன் போன்ற உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளார். தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி சரோஜா தேவி ஒரு முறை பகிர்ந்துகொண்டார்

நான்காவது மகளாக பிறந்த சரோஜா தேவி

பெங்களூர் சிட்டியில் சாம்ராஜ்பேட்டை என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்தவர் சரோஜா தேவி. பார்வதி கமலா சித்தலிங்காம்பிகா என ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று சரோஜா தேவியின் அம்மா விருப்பப்பட்டுள்ளார். நான்காவதும் பெண் குழந்தையாக பிறந்தவர் தான் சரோஜா தேவி. நான்கு பெண் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்கிற பயம் அம்மாவுக்கு இருந்தாலும் அவர் அதை கடவுளின் முடிவாக ஏற்றுகொண்டார். ஆனால் சரோஜா தேவியின் தாத்தா நான்காவது பெண்ணை வேறு ஒருத்தருக்கு கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். " நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை" என சரோஜா தேவி இதைப் பற்றி பேசும்போது கூறியுள்ளார்

பத்மஶ்ரீ விருது பெற்றபோது வருத்தப்பட்ட தாத்தா

சிறிய வயதில் இருந்தே தனது அம்மாவின் செல்ல பிள்ளையாக வளர்ந்தவர் சரோஜா தேவி. வித விதமான பூக்களை தலையில் சூடிக் கொள்வது அவருக்கு பிடிக்குமாம். அதிக கூச்ச சுபாவமுள்ளவர். தனது அம்மா எது சொன்னாலும் அதை அப்படியே கேட்டு நடப்பவர். அம்மா சொல்லும்படிதான் உடை அணிவார் , சடை போட்டுக் கொள்வார். பிற்காலத்தில் அவர் நடிக்க வந்தபோதும் தனது அம்மாவுக்கு ஷாட் ஓக்கே என்றால் அவரும் சமாதானம் அடைவார். அப்படி ஷாட் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த ஷாட்டை மறுபடியும் அடுத்த நாள் எடுத்துக் கொள்ளலாம் என இயக்குநரிடம் பேசுவாராம்.

சரோஜா தேவி பிறந்தபோது அவரை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட சொன்ன அதே தாத்தா தனக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தபோது "ஐயோ சின்ன வயதில் உன்ன வேற ஒருத்தருக்கு கொடுத்துவிட சொன்னேனே ' என்று தன்னை கட்டிப்பிடித்து அழுததாக சரோஜா தேவி தெரிவித்துள்ளார்