அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஆதிநாராயணனின் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் அதிரடி.

ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி, அதிமுக சார்பில் இன்பதுரை எம்.பியும், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவரான ஆதிநாராயணனும் மனுத் தாக்கல் செய்தனர்.

மனு மீதான விசாரணை

இந்த வழக்கின் விசாரணை கடந்த 4ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக் வந்தது. அப்போது, நகராட்சித்துறை மீது வழக்குத் தொடர நீங்கள் யார் என்று ஆதிநாராயணனைக் கேட்ட முதன்மை அமர்வு, மனுதாரர் ஆதிநாராயணன் தன்மீது நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான பல உண்மைகளை மறைத்து, அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை பொதுநல மனுவில் ஆதிநாராயணன் முழுமையாக தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு, மனுதாரர் ஆதிநாராயணன் தனது மனுவின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இன்றைய விசாரணையில் வழக்கு தள்ளுபடி

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத்துறைக்கு எதிராக ஆதிநாராயணன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. அதிமுக சார்பில் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை மட்டும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தமிழக பாஜகவுடன் மருதுசேனை ஆதிநாராயணன் நெருக்கம் - பின்னணி என்ன?

மருதுசேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன், பாஜக முக்கிய நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் என்கிற ஆதிநாராயணத்தேவர். முக்குலத்தோர் சமூகத்தின் ஒரு உட்பிரிவான அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். மருதுசேனை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக போட்டி

மருதுசேனை அமைப்பின் மூலம் இவர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றபோதும், சில முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களோடு எப்போதும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்.பி.உதயகுமாரின் வாக்குகளை பிரிக்கும் நோக்கத்தில், வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஆதிநாராயணன்.

பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் களம்?

அதேபோல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடனும் நல்ல தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஜன.25ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதிநாராயணன் நேரில் சந்தித்துள்ளார். அதேபோல், பிப்.19 (நேற்று) மதுரையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தையும் ஆதிநாராயணன் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து, மருதுசேனைத் தலைவர் ஆதிநாராயணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படவிருப்பதாகவும், வாய்ப்புக் கிடைத்தால், பாஜகவின் பின்புலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு, கொலை உள்ளிட்ட வழக்குகள் ஆதிநாராயணன் மீது உள்ளது. சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் தி.நகரில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, சென்னை அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக ஆதிநாராயணனை போலீஸார் கைது செய்தததும் குறிப்பிடத்தக்கது.