அமரன் திரைப்படம் பார்த்த பின்பு , தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உலக நாயகன் திரு. கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தை பார்த்து மட்டற்ற மகிழச்சியும், மன நிறைவும் அடைந்தேன்.

நேரில் பார்த்தது போல் தத்ரூபமாக உள்ளது

காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைப் போல தத்ரூபமாக அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படங்களை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிகர் திரு. சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.

நடிகை சாய் பல்லவி கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்

அமரன் திரைப்படம் பயங்கரவாதத்தை முறியடிக்க, நமது ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டுப் பற்றோடு எத்தகைய தியாகத்தை செய்ய முனைகிறார்கள் என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உணர்த்துகிறது. இப்படத்தில் திரு. கமல்ஹாசன் அவர்கள் நடிக்காமல் திரு. சிவகார்த்திகேயனுக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கி நடிக்க வைத்து , தயாரித்ததன் மூலம் அவரது நம்பிக்கை அபார வெற்றி பெற்றிருக்கிறது. இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கம்பீரமான ராணுவ வீரரின் தோற்றத்தில் தன் உடல் மொழியால் தான் ஏற்றிருக்கும் கதா பாத்திரத்தை சுமந்து பயணித்ததை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இத்திரைப்படத்தில் எல்லோரையும் நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் திரு. ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்த சாய்பல்லவி, படத்தை பார்க்கிறவர் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார். அவர் நடிக்கவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனைவரது பாராட்டையும் வெற்றிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் துறந்த ராணுவ வீரரின் தியாகத்தை கதையாக மட்டுமல்லாமல், எல்லையோரத்தில் பயங்கரவாதத்தோடு போராடுகிற முகுந்த் வரதராஜன், காதல் மனைவியின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் வைத்திருந்த பாசப் பிணைப்பை இணைத்து இத்திரைக்கதை எழுதி வடிவமைக்கப்பட்டு , இயக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த அனைவருமே மிகச் சிறப்பாக தங்களது பணியை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக பலரை இழந்திருக்கிறோம். பல ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

நமது மண்ணையும், நாட்டையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் தெளிவாக உணர்த்துகிறது. முகுந்த் வரதராஜனாக நடித்த திரு. சிவகார்த்திகேயன் சொந்தமாக ஒரு வீடு வாங்குவதற்கு கடனை வாங்கி, அந்த மாத தவணையை செலுத்துவதற்கு தனது வருமானத்தில் ஒரு பங்கையும், தனது மனைவியின் வருமானத்தில் ஒரு பங்கையும் செலுத்துவதற்கு திட்டமிடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையின் உண்மை நிலை அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தினர் அனைவரும் பார்க்க வேண்டும்

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் ராணுவ வீரர்கள் எப்படி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அதை எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டு, வெளிவந்திருக்கிறது. இதற்காக திரு. கமல்ஹாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இத்திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிகமிக அவசியமாகும்.

அமரன் திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.