கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அவரது சகோதரர் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியனின் சினிமா பயணம், விஜயகாந்தின் ஆசைகள் மற்றும் நடிகர் சரத்குமார் அளித்த ஆதரவு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்

சண்முகத்தின் ரசிகனாக:

விஜய பிரபாகரன் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.

சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். 'எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்' என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான்.

சினிமாவில் குறையாத ஆர்வம்:

கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான். 13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

சரத் சார் என்றவுடன் சந்தோஷப்பட்டேன்

நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன். வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.

”கேப்டனின் ஆசி இருக்கு”

யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக 'அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் - யுவன் ஷங்கர் ராஜா ' என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

'சகாப்தம்' படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 'சகாப்தம்' படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான 'படைத்தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான 'கொம்பு சீவி' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட 'சகாப்தம்' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அப்பா இதை தான் சொல்வார்:

அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார். அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த 'உசிலம்பட்டி..' பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன். படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,'' என்றார்.