திருச்சி: நடிகர் விஜய்க்கு நல்ல மனது இருக்கிறது. அதனால் மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டி பரிசு வழங்குகிறார். இந்த விழாவில் பெற்றோர் ஒருவர் காமராஜருடன் விஜய்யை ஒப்பிட்டு பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில், ஒருநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஆட்களை பணியில் சேர்க்கும் இம்முகாமில், நோக்கியோ, டாட்டா, பிர்லா, ஒமேகா உள்ளிட்ட தனியார் துறையை சேர்ந்த 43 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், பள்ளி கல்வி, கல்லூரி கல்வி, தொழிற்கல்வி பயின்ற ஆண்கள், பெண்கள் என சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற திருச்சி தொகுதி முன்னாள் உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்துக்கொண்டு, பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் விஜய் நிறைய சம்பாதிக்கிறார். காசு இருந்தாலும் கொடுப்பதற்கு மனம் வேண்டும். உதவி செய்கிற மனசு அவருக்கு இருக்கிறது. அதனால், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், பாராட்டு விழா நடத்தி, பரிசு பொருட்களை கொடுக்கிறார்.

இது நல்ல விஷயம் தான். அங்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெற்றோர், 'அடுத்த காமராஜர் நீங்கள்தான் ' என நடிகர் விஜயைப் பார்த்து பேசியுள்ளார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் என அனைவரும் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு, அவர்கள் மட்டுமே நிகரானவர்கள். காமராஜருடன் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்.

முருகன் மாநாட்டிற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் எதிரிகள் கிடையாது. அரசியல் கட்சிகள் அரசியல் மாநாடு நடத்தலாம். அதேசமயம், பா.ஜ.க சாமியார்கள் மாநாடு நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஆதாரங்களை வைத்து ஞானசேகரன் என்பவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வழங்கப்படும் முன்பே, அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், ஞானசேகரனுடன் மேலும் சிலர் குற்றவாளிகளாக உள்ளனர் என அண்ணாமலை பேசிவருகிறார். இதனால் என்ன பயன்?.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சென்றது வருத்தம் தான். திருச்சி தொகுதி தோழமை கட்சிக்கு கொடுக்கப்பட்டது. சகோதரர் துரை வைகோ வெற்றி பெற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். வருகின்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவதற்கான எனது குரல் ஒலிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.