தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதற்காக கொள்கையை விட்டு கூட்டணி என கூறுவது கட்சி ஆரம்பித்ததன் நோக்கத்தை அவமதிப்பதாகும்? என காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்காரைக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பங்கேற்று கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொள்கையை விட்டு கூட்டணி:

கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று டி.டி.வி., தினகரன் கூறுகிறாரே? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கொள்ளை வேறு கூட்டணி வேறு என்று அனைவரும் கூறுகின்றனர். கொள்கையை விட்டு என்ன கூட்டணி. கொள்கையை விட்டு கூட்டணி என்பது புது விளக்கமாக இருக்கிறது. 10 பாவங்களை காந்தி கூறுகிறார். அதில் ஒன்று கொள்கையில்லாத அரசியல். ஒவ்வொருவரும் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தது எதற்காக? ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்த கொள்கையை நிறைவேற்றத்தானே? அந்த கொள்கையை விட்டு கூட்டணி சேருவது கட்சியை அவமதிப்பதாகும். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால் அது நியாயமாகி விடுமா? உண்மையான கொள்கை நோக்கம்தான் வழிநடுத்தும். அதை விட்டு தேர்தல் நேரத்தில் கொள்கையை விடுவது எதற்காக?

ஊழல் இல்லாத கட்சி பாஜகவா?

ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஊழல் இல்லாத ஆட்சி, எளிமையான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி என்கிறார்கள். எந்த கட்சி ஊழல் கட்சி, எந்த கட்சி நேர்மையில்லாத கட்சி அவர்களுக்கு தெரியும். ஆனால், தேர்தல் நேரத்தில் அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சீட்டு வாங்குவது மாற்றமா? ஏமாற்றமா? பாரதிய ஜனதா ஊழலுக்கு எதிரான கட்சி என்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து 42 பேரை தூக்கி விட்டனர்.

ஒரு ஆளுக்கு 30 கோடி கொடுத்துள்ளனர். இது லஞ்சம் இல்லையா?. இது போன்று எவ்வளவோ உதாரணங்கள். இரட்டை இலைக்கு காசு கொடுத்தவர் டி.டி.வி., அவரோடு பா.ஜ., கூட்டணி வைத்துள்ளனர். அப்படி என்றால் ஊழல் இல்லாத கட்சி என்று சொல்வது எப்படி? கட்சியை காப்பாற்றுவதே லட்சியமாக கொண்டுள்ளனர். ஒரு தோல்வியை தாங்காதவர்கள். காயமே படாமல் போரில் வெல்வது என்றால் எப்படி? முன்னோர்கள் எல்லோரும் நமக்கு கற்பித்தது எதற்காகவும் உண்மையை விட்டு கொடுக்காதே என்பது. விமர்சனங்களுக்கு பயப்படக்கூடாது. நம்பி நிற்கும் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

இரண்டு பேரை உள்ளே போட்டதால் குட்கா, கோக்கைன் போதை பொருள் நின்று விடுமா? சாராயம் காய்ச்சி விற்று விட்டு, உங்கள் அப்பாவாக பேசுகிறேன் என்று சொல்கிறார் தற்போதைய முதல்வர்? 10 லட்சம் கோடி கடன் தமிழகத்தில் உள்ளது. எல்லா துறையிலும் கடன் உள்ளது. அரசு பள்ளியை சீரமைக்க முடியவில்லை. ஆனால், உங்கள் சமாதி எப்படி உள்ளது. அரசு பள்ளி கல்லூரிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பிள்ளைகள் ஏன் படிப்பதில்லை.

ஏனென்றால் தரமில்லை. தரங்கெட்டவர்கள் கையில் நீண்ட காலம் ஆட்சி உள்ளதால், அது தரம் கெட்டுள்ளது. தனி முதலாளி நடத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நன்றாக உள்ளது. அரசின் வேலை என்ன? இந்த அரசை நிறுவவதற்கு ஏன் லட்சம் கோடி செலவழித்து தேர்தல் நடத்த வேண்டும்.

பாமக குறித்து:

தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள சமூகம் வன்னியர் சமூகம். அந்த சமூகத்தை மேம்பட வைத்தவர் ராமதாஸ். தற்போது அவர் வீட்டை சரி செய்ய வேண்டும் என நினைக்கிறார். கட்சிக்குள் நடப்பது செல்ல சண்டை. எந்த வீட்டில் சண்டை இல்லை. எந்த கட்சியில் சண்டை இல்லை. அதை பெரிதுபடுத்தி தோண்டுவதால் அந்த காயம் பெரிதாகிறது. அமைதியாக விட்டால் அந்த காயம் ஆறி விடும். உரிய தருணத்தில் நான் இருவரையும் சந்திப்பேன்.

இந்தியாவை யார் ஆளுவது என்ற நிலைப்பாட்டில் பா.ஜ.வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்தால் அது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டை யார் ஆளுவது என்று பி.ஜே.பி., நினைத்து கூட்டணி வைத்தால் அது அதிமுகவிற்கு தேவையற்ற சுமைதான். சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி ஆட்சியாளர்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ யாரும் கேள்வி கேட்பது இல்லை. மக்கள் சட்டம் ஒழுங்கு பற்றிபேசினால் அவர்கள் மீது வழக்கு பாய்கிறது. மக்கள் பேசவில்லை என்பதால் நாங்கள் பேசுகிறோம். மக்களின் மனக்குரலாகத்தான் நாங்கள் பேசுகிறோம், என்றார்.