கள்ளழகர் சித்திரைத் திருவிழா - மதுரை மாநகர் ரிசர்வ்லைன் தொடங்கி தல்லாகுளம் வரையிலான மண்டகப்படிகளில் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எதிர்சேவையாற்றிவரும் கள்ளழகர்.

பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு சர்க்கரை தீபமேந்தி வரவேற்கும் பக்தர்கள்.

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து நேற்று மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார். பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் இன்று அதிகாலை மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது.

மண்டகப்படிகளில் எதிர்சேவையாற்றி எழுந்தருளிவருகிறார்.

பின்னர் புதூர், டி.ஆர்.ஓ காலனி வழியாக ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகர், மாலை 4 மணி முதல் ரிசர்வ்லைன் தொடங்கி அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் பகுதியில் உள்ள ஏராளமான மண்டகப்படிகளில் எதிர்சேவையாற்றி எழுந்தருளிவருகிறார். எதிர்சேவை நிகழ்வை தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளம் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று வெட்டிவேர் சப்பரத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் இரவு 3 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பாக ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார். அதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் வழியாக புறப்பாடாகி நாளை அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளவுள்ளார். இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் எதிர்சேவையின் போது மதுரை மாநகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏந்தியபடி கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.