கடலூர்: கடந்த 50, 60 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து சாற்றை அவர்கள் குடித்து விடுகிறார்கள் சக்கையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம் இந்த முறை அதிக இடங்களை கேட்போம். ஆட்சியிலும் பங்கு பெறுவோம். ஆர்.எஸ்.எஸ் பாஜக போன்ற நச்சுப் பாம்புகளை அழிப்பதற்கான கூட்டணி இதுதான். அந்த காரணத்திற்காக மட்டுமே எங்களது உரிமைகளை நாங்கள் இழந்து விட மாட்டோம். நாங்கள் கடமையை செய்கிற நேரத்தில் உரிமையையும் கேட்போம் என சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார்.

கூட்டணியில் இருந்து சாற்றை அவர்கள் குடித்து விடுகிறார்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வக்ஃப் சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக மோடி அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை சுக்கு நூறாக உடைக்கிறார். நான் நேரடியாக அரசமைப்புச் சட்டத்தை எதிர்க்கிறேன் என்று சொன்னால் அதற்கு எதிர்ப்பு அதிகமாக வரும். இதற்கு மாற்றாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டத்தை தங்களுக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்ற காரணத்தால் தீர்மானமாக கொண்டு வந்து அதனை ஒரு நிறுவனத்தின் மீது தெளிக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதை வக்ஃப் வாரியத்தின் மீது திணிக்க பார்க்கிறார்.

சங்கராச்சாரியார் அவர்கள் ஓர் இஸ்லாமியர் கொடுத்தார் என்பதற்காக இடத்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தார். அன்போடு கொடுத்ததை பெற்றுக் கொண்டார். இதில் என்ன இருக்கிறது மோடிக்கு ஏன் இதன் மேல் இவ்வளவு விரோதம். சங்கர மடமே ஏற்றுக் கொண்ட பிறகு இதில் மோடிக்கு என்ன இருக்கிறது இதுதான் முதல் சட்ட திருத்தம். இந்த வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஓர் கையெழுத்து இயக்கத்தை துவங்கி இருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சி இப்பொழுது தான் அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது.

அதிக தொகுதிகளை நாங்கள் கேட்போம்

நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை, சிதம்பரம் தொகுதி மட்டுமல்ல நிறைய தொகுதிகளை கேட்க வேண்டும் என நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே எங்களது காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ் அவர்கள் அதிக இடங்களை கேட்போம். ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என தெரிவித்துள்ளார். இது சரியான கருத்து, கடந்த 50, 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்து சாறை அவர்கள் குடித்து விடுகிறார்கள் சக்கையை நாங்கள் பார்பதுமான சூழ்நிலைதான் உள்ளது.

நச்சுப் பாம்புகளை அழிப்பதற்கான கூட்டணி

அந்த நிலையை மாற்றி ஆளுகின்ற அரசாங்கத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்கிற நிலைக்கு நாங்கள் வருவோம். அதே நேரம் எங்களது கூட்டணி திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தான் நாங்கள் இருப்போம். ஏனென்றால் ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற நச்சுப் பாம்புகளை அழிப்பதற்கான கூட்டணி இதுதான். எனவே அந்த காரணத்திற்காக மட்டுமே எங்களது உரிமைகளை நாங்கள் இழந்து விட மாட்டோம். நாங்கள் கடமையை செய்கிற நேரத்தில் உரிமையையும் கேட்போம்.

கடமையில் தவற மாட்டோம் அதே நேரம் எங்களது உரிமையை கேட்போம். அதைத்தான் எங்களது சட்டமன்ற தலைவர் ராஜேஷ் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம் அரசாங்கத்திலும் ஆட்சியிலும் நாங்கள் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்றார்.

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மறைத்துக் கொண்டு சென்றது குறித்த கேள்விக்கு
அதற்குத்தான் போகாத இடம் தன்னில் போக வேண்டாம் என அவ்வையார் அந்த காலத்திலேயே சொன்னார்கள் இதை அவர் போவதற்கு முன்பே நாம் சொல்லி இருக்க வேண்டும் பாவம் அவர் போயிட்டு வந்த பிறகு சொல்கிறோம் என்றார்.

இந்தப் பக்கம் வந்தால் அறைந்துவிடுங்கள்

விவசாய போராளிகளை 100 ரூபாய் கொடுத்தால் இதுபோல் பல போராளிகள் வருவார்கள் என பா.ஜ.க எம்பி கங்கனா ரனாவத் பேசியது குறித்த கேள்விக்கு அவர் இப்போது மட்டுமல்ல பலமுறை இதுபோல் பேசியுள்ளார். ஒருமுறை விமான நிலையத்தில் பெண் காவலர் கங்கனா ரனாவத்தை அறைந்து விட்டார். ஏன்? என கேட்ட போது அவர் அதிகமாக பேசினார் என காவலர் தெரிவித்தார். அதுபோல் அவர் இந்தபக்கம் வந்தால் அறைந்துவிடுங்கள் எனத் தெரிவித்தார்.