முறையற்ற உறவால் ஏற்பட்ட பிரச்சனை

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹமீதா ( வயது 55 ) தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் பர்வேஸ், தனது அண்ணனின் மனைவியான ஷபானாவுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை ஹமீதா கடுமையாகக் கண்டித்து வந்ததோடு, பணப் பரிமாற்றம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஹமீதாவை ஒழித்துக் கட்ட பர்வேஸ் , ஷபானாவும் திட்டமிட்டனர்.

கழுத்தை நெரித்து கொலை

அதன்படி கடந்த மார்ச் 10 ம் தேதி பர்வேஸ், ஷபானா மற்றும் ஷபானாவின் தந்தை ஃபிரோஸ் ஆலம் ஆகிய மூவரும் இணைந்து வீட்டில் ஹமீதாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர், உடலை மறைத்து வைத்த அவர்கள், மறுநாள் மார்ச் 11-ஆம் தேதி, பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள கோயில் பகுதி ஒன்றில் வீசி உள்ளனர். இதற்கிடையில் தனது தாயைக் காணவில்லை என்று பர்வேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடி உள்ளார்.

மறுநாள் காலை சாக்கு மூட்டையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். சடலத்தைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட அதே வகை கயிறு பர்வேஸின் வீட்டிலும் இருந்ததைக் கண்டறிந்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் அவரிடமும் ஷபானாவிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இருவரும் தாங்கள் செய்த கொலையை ஒப்புக் கொண்டனர்.

சிசிடிவி - யில் சிக்கிய காட்சிகள்

இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த ஷபானாவின் தந்தை ஃபிரோஸ் ஆலம், சடலத்தைச் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி போலீசாருக்கு ஆதாரமாகக் கிடைத்தது. அவர் பீகாருக்குத் தப்பிச் சென்றதை அறிந்த சூரத் போலீஸார், பீகார் அதிரடிப்படை உதவியுடன் பாட்னா ரயில் நிலையத்தில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேலும் பெற்ற தாயைக் கொன்ற போதும், அதற்காகச் சிறிதும் வருந்தாத பர்வேஸ் மற்றும் ஷபானாவின் செயலால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தாய் - மகன் இடையிலான உறவைச் சிதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.