விதிமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் துரை குருராம். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2023 - ல் தகவல் கேட்டு விண்ணப்பித்தார். அதில், மாநகராட்சி 76 வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில், அனுமதி பெறாமல் விதிமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உட்பட தகவல்களை கேட்டிருந்தார். தகவல் கிடைக்காததால், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு, மனுதாரருக்கும், பொதுத் தகவல் அலுவலருக்கும் 'சம்மன்' அனுப்பப்பட்டது. சமீபத்தில் நடந்த விசாரணைக்கு மனுதாரர் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பில், சென்னை மாநகராட்சி, திரு.வி.க., நகர் மண்டல செயற்பொறியாளரும், பொதுத் தகவல் அலுவலருமான சரவணன் ஆஜரானார்.

விசாரணையின் போது, பொதுத் தகவல் அலுவலர் சரவணன் கூறுகையில் ;

மனுதாரரின் மனுவுக்கு, 2024 ஜூலை மாதம் தேதியிட்ட கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டது என்றார்.

மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு

மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டது குறித்து சரியான விளக்கம் ஏதும் பொதுத் தகவல் அலுவலரால் , ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க இயலவில்லை. இதன் மூலம், பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மனுதாரர் தகவல் கேட்டு விண்ணப்பித்த போது பணியில் இருந்த பொதுத் தகவல் அலுவலரும், தற்போது பணியில் இருப்பவரும் ஒரே நபர் ஆவார். எனவே, மனுதாரரின் மனுவிற்கு எந்தவித தகவல்களும் வழங்காத காரணத்திற்காக, பொதுத் தகவல் அலுவலர் சரவணனுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேற்படி அலுவலர் அபராதத் தொகையை 10 நாட்களுக்குள் அரசு கணக்கில் செலுத்தி, அதற்கான ரசீதை ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.