தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தூய்மைப் பணியாளர்களுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் படி, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி கடந்த 2007-ஆம் ஆண்டு "தூய்மை பணியாளர் நல வாரியம்" அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி. கண்கண்ணாடி வாங்க நிதியுதவி. முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியத்தில் தற்போது 3,27,232 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் 15.11.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து மாநகராட்சிகள். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் (9.02.2026) விரிவுப்படுத்தி தொடங்கி வைத்தார்.

அப்போது வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1.29.689 தூய்மைப் பணியாளர்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றிற்கு 213 கோடியே 92 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். முன்னதாக, தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.