பாகிஸ்தானில் தீவிரவாத நிலைகளே இல்லை என்றும் பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சர் அத்தாவுல்லா தரார் தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் தெரிவித்த கருத்துக்கு, அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரே ஃபேக்ட் செக் செய்து அவரது மூக்கை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்காக பல நேர்மையற்ற செயல்களை செய்ததாக தன்னுடைய முந்தைய நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அத்தாவுல்லா தராரை நோஸ் கட் செய்துள்ளார் தொகுப்பாளர்.

நேரலையில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சியான Sky News-இல் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், நேரலையில் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்தியா நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்தும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைபாடு குறித்து எடுத்துரைத்த அத்தாவுல்லா தரார், "பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் எதுவும் இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. மேற்கில் உள்ள எல்லைகளில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?

பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணி நாடாக நாங்கள் (பாகிஸ்தான்) இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் 90 ஆயிரம் உயிர்களை பறி கொடுத்திருக்கிறோம். மறுபுறம், இந்தியா, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்டபோது, அதைக் கண்டிக்கக்கூட இல்லை. இந்தச் சம்பவம் குறித்து எந்த கவலையும் தெரிவிக்கவில்லை" என்றார்.

நேரலையில் உடனே குறுக்கிட்டு பேசிய தொகுப்பாளர் யால்டா ஹக்கீம், "ஒரு வாரத்திற்கு முன்பு, எனது நிகழ்ச்சியில், உங்கள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து வந்ததாகவும் ஆதரவளித்து வந்ததாகவும் மற்றும் அவர்களை பயன்படுத்தி வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்:

கடந்த 2018ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபராக பதவி வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் டபுள் கேம் ஆடுவதாக குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கான ராணுவ உதவியை நிறுத்தினார். ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், பெனாசிர் பூட்டோ, உங்கள் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறியதற்கு நேர் எதிராக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது வரலாற்று ரீதியாக பாகிஸ்தானின் கொள்கைகளின் ஒரு பகுதியாகும் என்று பிலாவல் பூட்டோ சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார்" என்றார்.

இதையடுத்து, என்ன பதில் அளிப்பது என தெரியாமல் முழித்த பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார், "9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஒரு முன்னணி நாடாக மாறியது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு அரணாக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். உலக அமைதிக்கு உத்தரவாதம் அளித்து, அப்படியே செயல்பட்டு வருகிறோம். பாகிஸ்தானுக்கு வருகை தந்து நிலைமையை நேரில் காண உங்களை அழைக்கிறேன்" என்றார்.

இதற்கு பதிலடி அளித்த தொகுப்பாளர் யால்டா ஹக்கீம், "நான் பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறேன். 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்ததற்காக பாகிஸ்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஐ.நா.வின் தடை (Grey List) பட்டியலில் இருந்தது" என்றார்.