கேவலமாக பேசிய சொந்தக்காரர்கள் முன்னால் நான் ஜெயித்து விட்டேன் என தாய் கிழவி படத்தில் மருத்துவராக நடித்த நடிகர் ஹுச்செந்தே நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முதன்மை வேடத்தில் நடித்த படம் தாய் கிழவி. சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படத்தில் ரெபேக்கா ரெய்சல், சிங்கம் புலி, முத்துக்குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் மருத்துவர் கேரக்டரில் ஹுச்செந்தே என்பவர் நடித்து மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றார். அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் பேசிய ஹுச்செந்தே, “தாய் கிழவி படத்தை எல்லாரும் கொண்டாடிட்டு இருக்காங்க. என்னை எல்லாரும் கொண்டாடுறாங்க. அதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு பூர்விகம் மதுரை தான். என்னுடைய தாத்தா, பாட்டி சீனாவில் ஓபியம் போர் நடந்த காலக்கட்டத்தில் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கு வருகை தந்தார்கள். அங்கு போர் புரிய வீட்டுக்கு ஒருவர் செல்ல வேண்டும் என சொல்லப்பட்டது.

இதனால் ஒரே மகனான எனது தாத்தாவையும் அவரது மனைவி, குழந்தைகளை என்னுடைய கொள்ளு தாத்தா கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டார். அவர்கள் சென்னை வந்து இறங்குகிறார்கள். பொதுவாக சீனா மக்களுக்கு குடிக்கவில்லை, சூதாடாவில்லை என்றால் இருக்க முடியாது. அதனால் 1914ம் ஆண்டு என்னுடைய பாட்டி தாத்தாவை மதுரைக்கு அழைத்து வந்து விட்டது. அப்படியே நாங்களும் இங்கு 4 தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம்.

நான் சீன மொழி பேசுவேன். தமிழும் நன்றாக பேசுவேன். 28 ஆண்டுகாலமாக சினிமாவில் போராடி வருகிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான மதுர சீரியல் மூலம் ரூ.500 சம்பளத்திற்கு வேலைக்கு வந்தேன். அதன்பிறகு சினிமா நண்பர்கள் மூலம் சரத்குமாரிடம் அறிமுகமானேன். காக்கி என்ற ஒரு படத்தில் அவருடன் நடித்தேன். ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டது.

தாய்கிழவி படம் பார்த்து விட்டு சரத்குமார் என்னை மிகவும் பாராட்டினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ராதிகாவிடம் சரத் அண்ணனை எனக்கு நன்றாக தெரியும் என கூறினேன். அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது ராதிகாவிடம் சரத்குமார் என்னை காட்டி இந்த நபரை நன்றாக தெரியும் என கூறினார். அதை ராதிகா வெற்றிக் கொண்டாட்ட மேடையில் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

சினிமா ஏதாவது ஒரு புள்ளியில் நம்மை மாற்றும். நிறைய பேர் பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற காரணங்களால் பின்வாங்கி விடுகிறார்கள். நானும் நிறைய அவமானப்பட்டுள்ளேன். சினிமாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் வாய்ப்பு கொடுத்தால் தெரிந்த மாதிரி நடிக்க வரும்.

மேலும் இயக்குநர் முத்தையா இயக்கி வரும் சுள்ளான் சேது படத்தில் நான் வில்லன் கேரக்டர் செய்திருக்கிறேன். அந்த படம் மூலம் ஒளிப்பதிவாளர் சுகுமார் பழக்கமானார். தாய்கிழவி படத்தைப் பார்த்து விட்டு முதலில் அவர் தான் பாராட்டினார். நிறைய பேரு சினிமாவில் தட்டி விடுகிறார்கள். தட்டிக்கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை தட்டி விடாதீர்கள். சொல்லப்போனால் சொந்தக்காரர்களே கேவலமாக பேசினார்கள். ஆனால் இன்றைக்கு நான் ஜெயித்து விட்டேன்” என ஹுச்செந்தே நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.