Yamaha RX 100 Relaunch: யமாஹா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான RX100 மோட்டார்சைக்கிள் மாடல், உத்தேச விலை மற்றும் மைலேஜ் தொடர்பான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

யமஹா RX 100 ரிட்டர்ன்ஸ்:

யமாஹா நிறுவனத்தின் RX100 மோட்டார்சைக்கிள் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிகவும் பிரபலமானதாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இந்த வாகனத்தை ஒருமுறையேனும் ஓட்ட வேண்டும் என்பது இன்றளவும் பலரின் ஆசையாக இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக RX100 மோட்டார்சைக்கிள் உற்பத்தியை யமாஹா நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில் தான், அந்த மோட்டார்சைக்கிளை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி, பல புதிய அம்சங்களை சேர்த்து மீண்டும் சந்தைப்படுத்த யமாஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தீவிரமாக பரவி வருகின்றன.

யமஹா RX 100 வடிவமைப்பு:

RX100 மோட்டார்சைக்கிள் மீதான மோகம் 2K கிட்ஸ் வரையிலும் தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் மீண்டும் அறிமுகமானால் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளரை கவர நல்ல மைலேஜ் அளிக்கும் வகையில், புதிய RX100 எடிஷன் அறிமுகமாகலாம். இளம்பயனாளர்களை கவரும் வகையில் நவீன அம்சங்களுடன் இந்த வாகனம் வெளிவர உள்ளது. யமாஹா நிறுவனம் RX100 மோட்டார்சைக்கிளை வெளியிடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் பல்வேறு தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

யமஹா RX 100 அம்சங்கள்:

RX100 மோட்டார்சைக்கிளை ஓட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசைகொண்ட 90கிட்ஸ்களை மட்டுமே இலக்காக கொண்டிருக்காமலம், எதிர்கால தலைமுறையினரையும் கவரும் நோக்கில் ஏராளமான அம்சங்கள் இந்த வாகனத்தில் இணைக்கப்பட உள்ளன. வட்டமான முகப்பு விளக்குகள், வளைவான எரிபொருள் டேங்க், எல்இடி விளக்குகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர் போன்ற அம்சங்களை இடம்பெறச் செய்யலாம். பின்புறத்தில் தனித்துவமான டெயில் லைட், ஸ்டைலான அலாய் வீல்கள் உடன், தற்போதைய உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்யும் வகையிலான நவீன இன்ஜின் செட்-அப் வழங்கப்படலாம். தொழில்நுட்பரீதியாக யமாஹா கனெக்ட் ஆப், அட்வான்ஸ்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, USB-CSB-C போர்ட் சார்ஜிங் அம்சங்கள் இணைக்கப்படலாம்.

யமஹா RX 100 விலை விவரங்கள்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய RX100 மோட்டார்சைக்கிள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை ரூ.1.40 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இதே மைலேஜ் மற்றும் விலையில் புதிய RX100 அறிமுகப்படுத்தப்பட்டால், அது ராயல் என்ஃபீல்ட் வாகனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கலாம்.

விண்டேஜ் RX 100:

யமாஹாவின் RX100 டூ ஸ்ட்ரோக் இன்ஜின் மோட்டார்சைக்கிளானது ஆனது இந்திய சந்தையில் முதல்முறையாக கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அபாரமான செயல்திறன், எடைகுறைவான அதேநேரம் கவனத்தை ஈர்கக்கூடிய டிசைன், 100சிசியில் சிறந்த நம்பகத்தன்மை காரணமாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிகவும் கவனம் ஈர்த்தது. இதன் காரணமாகவே உற்பத்தி கைவிடப்பட்ட பிறகும், இன்றளவும் அந்த வாகனங்களுக்கு கடும் டிமேண்ட் நிலவுகிறது. ஆனால், 2 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் அதிகளவில் மாசு ஏற்படுத்திய நிலையில், கடுமையான உமிழ்வு விதிகள் மற்றும் 4 ஸ்ட்ரோக் இன்ஜினை நோக்கிய மாற்றம் காரணமாக RX100 பைக் விற்பனை கடந்த 1996ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே இந்த வாகனம் சுமார் ரூ.16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.